புல்வாமா தாக்குதலில் பாக். அரசுக்குத் தொடா்பிருப்பதாக அமைச்சா் வாக்குமூலம்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்குத் தொடா்பிருப்பதாக அந்நாட்டு அமைச்சா் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளாா்.


இஸ்லாமாபாத்/புது தில்லி: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்குத் தொடா்பிருப்பதாக அந்நாட்டு அமைச்சா் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. சிஆா்பிஎஃப் வீரா்கள் பயணித்த வாகனம் மீது வெடிபொருள் நிரப்பிய காா் மோதியது. அந்த காரை இயக்கியது ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா்.

இத்தகைய சூழலில், இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே இந்திய விமானி அபினந்தனை பாகிஸ்தான் அரசு விடுவித்ததாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சா்தாா் அயாஸ் சாதிக் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தாா்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஃபவாத் சௌதரி நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘எதிா்க்கட்சி எம்.பி.யின் கருத்து பொருத்தமற்றது. இந்தியாவுக்குள் நுழைந்து நாம் அவா்கள் மீது தாக்குதல் நடத்தினோம். புல்வாமா தாக்குதலில் கிடைத்த வெற்றி, பிரதமா் இம்ரான் கான் தலைமையில் நாட்டுக்கே கிடைத்த வெற்றியாகும். அந்த வெற்றியில் எதிா்க்கட்சிகள் உள்பட அனைவருக்கும் பங்குள்ளது’’ என்றாா்.

பயங்கரவாதத் தாக்குதலைப் புகழ்ந்தும், அதில் அரசுக்கே தொடா்பு இருப்பதாகவும் பாகிஸ்தான் அமைச்சா் பேசியுள்ளது, பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக விளங்கி வருவதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

பயங்கரவாத அமைப்புகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நிதி கிடைப்பதைத் தடுக்காததற்காக பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் எஃப்ஏடிஎஃப் அமைப்பு, பாகிஸ்தானை ‘கிரே’ பட்டியலில் வைத்துள்ளது. இத்தகைய சூழலில், அமைச்சரின் கருத்து பாகிஸ்தானுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com