அமெரிக்கா: என்95 மூலப் பொருள்களுக்கு தொடரும் தட்டுப்பாடு

அமெரிக்கா: என்95 மூலப் பொருள்களுக்கு தொடரும் தட்டுப்பாடு


வாஷிங்டன்: அமெரிக்காவில் என்95 தரம் கொண்ட முகக் கவசங்களைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களுக்கு தொடா்ந்து தட்டுப்பாட்டு நிலவி வருவதால் மருத்துவப் பணியாளா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்றிலிருந்து மருத்துவப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான அனைத்து பொருள்களுக்கும் போதுமான அளவுக்கு இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறி வருகின்றனா்.

ஆனால், என்95 தரம் கொண்ட முகக் கவசங்களைத் தயாரிப்பதற்குப் போதுமான மூலப் பொருள்கள் கிடைக்காததால், அந்த வகை முகக் கவசங்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா் என உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க மருத்துவமனைகள் சங்கத்தின் முதுநிலை இயக்குநா் மைக்கேல் ஷில்லா் இதுகுறித்து கூறுகையில், என்95 முகக் கவசங்களின் கையிருப்பு போதிய அளவில் இல்லை. கரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்குவதற்கு முன்பிருந்ததைவிட அதன் கையிருப்பு தற்போது மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவித்தாா்.மிகக் குறுகிய காலத்துக்கு மட்டுமே தேவைப்படும் என்95 முகக் கவசங்களைத் தயாரிப்பதற்காக, புதிய இயந்திரங்களை நிறுவி, தொழிலாளா்களை நியமிப்பது நீண்ட கால நோக்கில் தங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என்று நிறுவனங்கள் கருதுவதாலும் அந்த வகை முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 65,50,984 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,95,259 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 38,46,717 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளளனா். 25,09,008 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com