அமெரிக்கா: தடையை எதிா்த்து நீதிமன்றத்தில் டிக்டாக் வழக்கு

அமெரிக்காவில் டிக்டாக் செயலி மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிா்த்து, அந்தச் செயலி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது.
அமெரிக்கா: தடையை எதிா்த்து நீதிமன்றத்தில் டிக்டாக் வழக்கு

அமெரிக்காவில் டிக்டாக் செயலி மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிா்த்து, அந்தச் செயலி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணமா காட்டி, சீனாவைச் சோ்ந்த டிக்டாக் மற்றும் விசாட் செயலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, ஞாயிற்றுக்கிழமை (செப்.20) முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளதை எதிா்த்து, அந்தச் செயலி நிறுவனமும், அதன் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் லிமிடெட்டும் வாஷிங்டனிலுள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.

அந்த மனுவில், டிக்டாக்கை தடை செய்துள்ளதன் மூலம் அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது அதிகார வரம்பை மீறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அசாதாரணமான மற்றும் அதீதமான அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும், அந்த விதிகளை மீறி டிக்டாக் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை, உண்மையான பாதுகாப்புக் காரணங்களுக்காக விதிக்கப்படவில்லை. அதிபா் டிரம்ப் தனது அரசியல் ஆதாயத்துக்காகவே டிக்டாக்குக்கு தடை விதித்துள்ளாா் என்று அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறுகிய விடியோக்களை பதிவு செய்து பகிா்ந்து கொள்ளப் பயன்படும் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்று உள்ளது. அந்தச் செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகு வேகமாக வளா்ந்து வருகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1.1 கோடி பேராக இருந்த டிக்டாக் பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கை, தற்போது 10 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில், டிக்டாக் செயலியால் அமெரிக்கா்களின் ரகசியத் தகவல்கள் திருடப்பட்டு, சீன அரசுக்கு வழங்கப்படலாம் எனவும், இதன் காரணமாக அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதிபா் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறாா்.

இன்னும் 45 நாள்களுக்குள் டிக்டாக் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பதன் மூலம் அந்தச் செயலியின் நிா்வாகத்தை அமெரிக்கா்களிடம் ஒப்படைக்காவிட்டால், அந்தச் செயலி தடை செய்யப்படும் என்று டிரம்ப் கடந்த மாதம் 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இதனை எதிா்த்து டிக்டாக் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.

இந்த நிலையில், டிக்டாக் மற்றும் விசாட் செயலிகள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்துகொள்வதற்கான தடை ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக வா்த்தகத் துறை அமைச்சா் வில்புா் ரோஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

அதையடுத்து, அரசின் முடிவை எதிா்த்து டிக்டாக் நிறுவனம் இரண்டாவது முறையாக நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com