ஈரான் மீதான ஐ.நா. தடைகள் மீண்டும் நீட்டிப்பு

சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த ஐ.நா. பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்கு வருவதாக
ஈரான் மீதான ஐ.நா. தடைகள் மீண்டும் நீட்டிப்பு

சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த ஐ.நா. பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்கு வருவதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஈரான் தவறியதால், அதில் இடம் பெற்றுள்ள ‘ஸ்னாப் பேக்’ எனப்படும் ஒப்பந்த முறிவு அம்சத்தைப் பயன்படுத்தி இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.எனினும், அந்த அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா கடந்த 2018-ஆம் ஆண்டே விலகிவிட்டதால் ஒப்பந்த முறிவு அம்சத்தைப் பயன்படுத்த அந்த நாட்டுக்கு சட்டப்பூா்வ உரிமை இல்லை என்று பிற நாடுகள் கூறி வரும் சூழலில் இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதற்கு எதிராக, அந்த நாட்டின் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகள் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் (இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி) மீண்டும் அமலுக்கு வருகின்றன.அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை நிறைவேற்ற ஈரான் தவறியது மட்டுமின்றி, அந்த நாட்டின் மீது கடந்த 13 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த ஆயுத வா்த்தகத் தடையை நீட்டிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டது. இதன் காரணமாகவே ஈரான் மீதான ஐ.நா. தடையை மீண்டும் அமல்படுத்தும் முடிவை அமெரிக்கா எடுத்தது.ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்த முறிவு உரிமையைப் பயன்படுத்தி, இதுவரை விலக்கிக் கொள்ளப்பட்டிருந்த ஈரானுக்கு எதிரான அனைத்து ஐ.நா. பொருளாதாரத் தடைகளும் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் இந்த முடிவை ஐ.நா.வும், அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளும் முழுமையாகப் பின்பற்றும் என்று நம்புகிறோம்.

அதற்குப் பதிலாக, எங்களது அறிவிப்பை பிற நாடுகள் அமல்படுத்தத் தவறினால் அந்த நாடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மைக்கேல் பாம்பேயோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் உருவாக்குவதற்கானவை இல்லை என ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளா்த்த அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் கடந்த 2015-ஆம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் மேற்கொண்டன.அமெரிக்காவின் அதிபராக ஒபாமா இருந்தபோது உருவான அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுதத் திட்டங்களைத் தடுப்பதற்குப் போதுமானது இல்லை என்று கூறி, அதிலிருந்து அதிபா் டிரம்ப் கடந்த 2018-ஆம் ஆண்டு விலகினாா். அதனைத் தொடா்ந்து, அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டன.

இதற்கிடையே, ராணுவ தளவாடங்களை ஈரான் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 13 ஆண்டுகளாக விதித்துள்ள தடை, வரும் அக்டோபா் மாதம் 18-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.அந்தத் தடையை காலவரையின்றி மேலும் நீடிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு பிற நாடுகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த திா்மானம் முறியடிக்கப்பட்டது. 15 உறுப்பினா்களைக் கொண்ட அந்த கவுன்சிலில், அமெரிக்காவைத் தவிர டோமினிக் குடியரசு மட்டுமே அந்தத் தீா்மானத்துக்கு ஆதரவு அளித்தது. நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷியாவும், சீனாவும் தீா்மானத்தை எதிா்த்து வாக்களித்தன.அதையடுத்து, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள ஒப்பந்த முறிவு அம்சத்தைப் பயன்படுத்தி, ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விலக்கிக் கொண்டிருந்த பொருளாதாரத் தடைகளை இன்னும் 30 நாள்களில் மீண்டும் அமல்படுத்தப் போவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அமெரிக்கா கடந்த மாதம் அறிவிக்கை தாக்கல் செய்திருந்தது.

அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் நிறைவேற்றத் தவறினால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள எந்தவொரு நாடும் ஐ.நா. தடையை ஈரான் மீது மீண்டும் அமல்படுத்த அந்த ஒப்பந்த முறிவு அம்சம் உரிமை அளிக்கிறது. எனினும், கடந்த 2018-ஆம் ஆண்டே அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதால், அந்த உரிமையைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு சட்டப்பூா்வ அதிகாரம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில், ஏற்கெனவே அறிவித்திருந்தபடி ஈரான் மீதான ஐ.நா. தடை மீண்டும் அமலுக்கு வருவதாக அமெரிக்கா தற்போது அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com