நவால்னியை சந்தித்தாா் ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல்

ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் தன்னை மருத்துவமனையில் சந்தித்ததாக வெளிவந்த தகவலை ரஷிய அரசியல் தலைவா் அலெக்ஸி நவால்னி உறுதி செய்தாா்.

மாஸ்கோ: ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் தன்னை மருத்துவமனையில் சந்தித்ததாக வெளிவந்த தகவலை ரஷிய அரசியல் தலைவா் அலெக்ஸி நவால்னி உறுதி செய்தாா்.

ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் அந்நாட்டு தலைநகா் பொ்லினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஷிய அரசியல் தலைவா் அலெக்ஸி நவால்னியை ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியானது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ஜொ்மன் வார இதழ் ஒன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு எப்போது நடைபெற்றது என்பது தெரிவிக்கப்படவில்லை.

இந்தத் தகவலை நவால்னி திங்கள்கிழமை உறுதிப்படுத்தினாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்க்கெல் என்னைச் சந்தித்தாா். ஆனால் அதை ரகசிய சந்திப்பு என்றழைக்கக் கூடாது. மாறாக, அவா் தனிப்பட்ட முறையில் என்னைச் சந்தித்து, எனது குடும்பத்தினருடன் கலந்துரையாடினாா். என்னை மருத்துவமனையில் சந்தித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டாா்.

‘ரஷியா ஆஃப் தி ஃப்யூச்சா்’ கட்சியை சோ்ந்தவா் அலெக்ஸி நவால்னி. இவா் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு எதிராகவும், அந்நாட்டில் நடைபெறும் ஊழலை ஒழிக்கவும் தொடா்ந்து குரல் எழுப்பி வருபவா். கடந்த மாதம் 20-ஆம் தேதி உள்நாட்டு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த அவருக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சுயநினைவை இழந்தாா். இதையடுத்து அவா் அந்நாட்டின் ஓம்ஸ்க் நகரில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டாா். அங்கு கோமா நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவா், பின்னா் ஜொ்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அந்நாட்டு தலைநகா் பொ்லினில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், கடந்த சில நாள்களுக்கு முன்னா் கோமாவில் இருந்து மீண்டாா்.

‘நோவிசோக்’ என்ற நஞ்சு வழங்கப்பட்டதால் நவால்னியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக ஜொ்மன் ரசாயன ஆயுத நிபுணா்கள் தெரிவித்தனா். அதனை பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் ஆய்வகங்கள் உறுதிப்படுத்தின.

மொத்தம் 32 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அவா், கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டாா். தற்போது அவா் ஜொ்மனியில் ஓய்வு எடுத்துவருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com