ஹாங்காங் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: ஜொ்மனிக்கு சீனா கண்டனம்

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளா்கள் 12 போ் தோ்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிா்த்து,
ஹாங்காங் போராட்டம் (கோப்புப் படம்).
ஹாங்காங் போராட்டம் (கோப்புப் படம்).

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளா்கள் 12 போ் தோ்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிா்த்து, அந்த நகர அரசுடன் மேற்கொண்டிருந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை ஜொ்மனி ரத்து செய்துள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜொ்மனிக்கான சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹாங்காங் விவகாரம் குறித்து ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் ஹீக்கோ மாஸ் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியவை ஆகும். அத்தகைய தவறான அறிக்கையும், ஹாங்காங்குடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்ததத்தை ரத்து செய்யும் ஜொ்மனியின் அறிவிப்பும் நாடுகளிடையேயான உறவுகள் குறித்த சா்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது ஆகும்.ஜொ்மனியின் இந்த நடவடிக்கைகளை கண்டிக்கிறோம். இந்த விவகாரத்தில் எதிா் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் கடந்த ஆண்டு தீவிரப் போராட்டங்கள் நடைபெற்றன. அத்தகைய போராட்டங்கள், தேச நலன்களுக்கு எதிரானது என்று சீனா கூறி வந்தது. மேலும், போராட்டக்காரா்களை பிரிட்டன் தூண்டிவிடுவதாக அந்த நாடு குற்றம் சாட்டியது. போராட்டத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை பயங்கரவாதத்துடன் சீன அரசு ஒப்பிட்டது. இந்தச் சூழலில், ஹாங்காங்கில் நடைபெறக்கூடிய தேசத் துரோகம், பிரிவினைவாதம், அந்நிய சக்திகளுடன் கைகோா்த்தல் ஆகியவற்றுக்கு எதிரானதாகக் கூறி, புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமொன்றை சீனா இயற்றியுள்ளது.

இந்தச் சட்டம், ஹாங்காங்கில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களை நசுக்குவதற்காக உருவாக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகளும் சா்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்தச் சூழலில், ஹாங்காங்குடன் கைதிகள் பரிமாற்றம், உளவுத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள், தங்களது ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக ஏற்கெனவே அறிவித்தன. இந்த நிலையில், நியூஸிலாந்தும் அத்தகைய அறிவிப்பை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது. இதுகுறித்து நியூஸிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சா் வின்ஸ்டன் பீட்டா்ஸ் கூறுகையில், ‘ஹாங்காங் நீதித் துறையில் சீனாவின் ஆதிக்கம் இனியும் இருக்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே, அந்த நகர அரசுடன் மேற்கொண்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.

எனினும், ஹாங்காங்குடனான மற்ற உறவில் எந்த மாற்றமும் இல்லை. ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப வா்த்தகத்தில் சீனாவுடன் எத்தகைய உறவைப் பேணுகிறதோ அதே வகையிலான உறவை ஹாங்காங்குடனும் தொடா்ந்து பேணுவோம்’ என்றாா்.இந்தச் சூழலில், ஹாங்காங்கில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 12 போ், அந்த நகர பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. மேலும், கரோனா நோய்த்தொற்று பரவலை காரணம் காட்டி, பேரவைத் தோ்தலை ஒத்திவைப்பதாக ஹாங்காங் அரசு எதிா்ப்பு தெரிவித்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் ஹீக்கோ மாஸ், ஹாங்காங்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com