த்ரீ கார்ஜஸ் அணை: சீனாவைக் காக்குமா, தாக்குமா?

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டுபோல் சீனாவின் த்ரீ கார்ஜஸ் அணை, அங்கு பெரும் சிக்கலை உண்டாக்கி வருகிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டுபோல் சீனாவின் த்ரீ கார்ஜஸ் அணை, அங்கு பெரும் சிக்கலை உண்டாக்கி வருகிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டுபோல் சீனாவின் த்ரீ கார்ஜஸ் அணை, அங்கு பெரும் சிக்கலை உண்டாக்கி வருகிறது.


அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டுபோல் சீனாவிலுள்ள த்ரீ கார்ஜஸ் அணை, தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. வெள்ளத்தைத் தடுக்கும் நோக்கில் கட்டப்பட்ட இந்தப் பிரமாண்டமான அணையின் முடிவை வெள்ளமே தீர்மானித்துவிடுமோ என்கிற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அணை:

உலகிலேயே 3-வது பெரிய அணை சீனாவிலுள்ள இந்த த்ரீ கார்ஜஸ் அணை. யாங்சி நதியின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை, 181 மீட்டர் (607 அடி) உயரம், 2,335 மீட்டர் நீளம் (7,660 அடி) கொண்டுள்ளது. இந்த அணை கட்டி முடிப்பதற்கு மட்டுமே சுமார் 20 ஆண்டு காலம் ஆனது. இந்தத் திட்டத்துக்கான செலவு 28.6 பில்லியன் அமெரிக்க டாலர்.

இந்த அணை பிரமாண்டமாக கட்டப்பட திட்டமிடப்பட்டிருந்ததால், இதுபற்றிய அச்சம் கட்டப்படுவதற்கு முன்பிலிருந்தே நிலவத் தொடங்கியது. அணை கட்டுவதற்கு நேரிட்ட 40 ஆண்டு கால தாமதத்துக்கு இதுவும் ஒரு காரணம்.

இதன் பிறகே 1994-ம் ஆண்டு அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. அப்போது, மின் உற்பத்தி மட்டுமே பிரதானமாக இல்லாமல், வெள்ளத் தடுப்புக்கும் உதவும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிடப்பட்டது.

அணை கட்டுமானப் பணிகள் 2006-இல் நிறைவுற்றன. இதன்பிறகு, 2012-இல் அணை மின் நிலையப் பணிகள் நிறைவுற்றன. தற்போது அணையிலிருந்து 22,500 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

சர்ச்சைகள்:

இந்த அணை கட்டப்பட்ட பின்னரும், கட்டப்படுவதற்கு முன்பு திட்டம் வகுக்கும்போதும் சரி, இதைச் சுற்றி தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வருகின்றன. 

இந்த அளவுக்கு அதிகமாக நீரைத் தேக்கி வைப்பதால், நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், இதன் விளைவாக அணையும் உடையும் அபாயம் இருப்பதாக அச்சம் நிலவி வருகிறது. 

இந்த அணை கட்டி முடித்து 14 ஆண்டுகள் ஆன பிறகும்கூட, தற்போதும் புவியியலாளர்கள் மத்தியில் இதே அச்சம் நிலவி வருகிறது. நீர்த் தேக்கத்தில் தண்ணீரின் அளவை உயர்த்தும்போதும், குறைக்கும்போதும் நீரில் ஏற்படும் அழுத்தம் காரணமாக நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த அணை காரணமாக பலமுறை கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதும் மறுக்கப்படுவதற்கில்லை. 

இது மட்டுமில்லாது, யாங்சி நதியையொட்டி காலம் காலமாக வாழ்ந்து வந்த லட்சக்கணக்கானோர் அணைக்காக அவர்கள் வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அணைக்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பல்வேறு மக்கள், தங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். இதை சீன அரசும் 2013-இல் ஒப்புக்கொண்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக அப்போது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2003-இல் முதன்முறையாக நீர்த்தேக்கம் கட்டப்பட்டபிறகு, சிலநாள்களிலேயே 80 இடங்களில் பெரியளவில் விரிசல்கள் ஏற்பட்டன. ஏற்கெனவே அச்சம் நிலவி வரும் நிலையில், இந்த விரிசல்கள் அணையின் பாதுகாப்புத் தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்கியது. எனினும், விரிசலால் பெரிதளவில் பிரச்னை இல்லை, சரி செய்யாவிட்டால்தான் நீர் கசிவு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அணையில் அக்டோபர் முதல் மே மாதம் வரை, அணையின் மின் நிலையத்தில் மின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக அதிகபட்சம் 175 மீட்டர் அளவுக்கு நீர் தேக்கி வைக்கப்படும். இதன் பிறகு ஜூன் மாதத்தில் மழை வரத் தொடங்கிய பிறகு, வெள்ள நீரைக் கருத்தில்கொண்டு நீர்த்தேக்கம் 145 மீட்டர் அளவுக்குக் குறைக்கப்படும்.

அணைக்கான முதல் சவால்:

இப்படி பல சர்ச்சைகளைக் கொண்டுள்ள இந்த அணைக்கு முதல் சவாலாக இந்த ஆண்டு வெள்ளம் அமைந்தது. இந்த முறை இரு வாரங்களுக்குமுன் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். தொடர் வெள்ளப்பெருக்கால், அணை எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடும் என்று அஞ்சப்பட்டது. நல்லவேளை, மழை குறைந்து அணை தப்பியது.

சீனாவில் 1998-இல் ஏற்பட்ட மோசமான பெருவெள்ளத்துடனே மக்கள் இதை ஒப்பிட்டுப் பார்த்தனர். இதன் காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க, அணையிலிருந்து பெரிதளவில் நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக மற்ற இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள கட்டப்பட்ட சீனாவின் நம்பிக்கையான இந்த அணைதான், தற்போது அவர்களுக்கே கவலைக்குரியதாகவும் மாறியுள்ளது. 

இந்த அணையால் விநாடிக்கு 8.40 கோடி லிட்டர் நீர்வரத்தை தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், வெள்ளத்தில் அணைக்கான தற்போதைய நீர் வரத்து 6.10 கோடி லிட்டராக இருந்தது. 

சமீபத்தில் இந்த அணையின் பணியாளர் ஒருவர் தெரிவிக்கையில், அணையின் சில பகுதிகள் சேதமடைந்திருப்பதாகவும், அணை சற்று சிதைந்துள்ளதாகவும் கூறினார். இந்தத் தகவல் ஒரு செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக நீர்வரத்து அதிகரித்ததனாலே, இது ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

எனினும், அதிகாரிகள் தரப்பில் இந்த அணை பாதுகாப்பாக இருப்பதாகவே கூறப்படுகிறது. அடுத்த 500 ஆண்டுகளுக்கு இந்த அணைக்கு யாராலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்றே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அணை குறித்து அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை வார்த்தைகள் விதைக்கப்பட்டாலும், இந்த அணை பெரும் அச்சத்தையும் விதைக்கிறது என்பதையும்  ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த பெரு வெள்ளத்துக்கு அணை தப்பியது என்றபோதிலும், இனி எப்போது பெரு வெள்ளம் வருமோ என்று அஞ்சுகிறார்கள் சீன மக்கள்.

இதை சீனா பெரும் சிக்கலாகக் கருதினாலும், கருதாவிட்டாலும் த்ரீ கார்ஜஸ் அணை சீனாவின் பெருமைகளில் ஒன்றாகும். எனவே, அணையைப் பாதுகாத்து, அச்ச உணர்வை போக்குவது சீனாவின் பிரதான கடமையாக இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com