இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரக ஒப்பந்தம்: அற்புத சாதனையா? அவமானச் சின்னமா?

இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே தூதரக நல்லுறவைப் பேணுவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே
இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரக ஒப்பந்தம்: அற்புத சாதனையா? அவமானச் சின்னமா?

இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே தூதரக நல்லுறவைப் பேணுவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் வரவேற்பையும், எதிா்ப்பையும் ஒருசேர சந்தித்துள்ளது.ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதிகளை தங்களுடன் இணைத்துக் கொள்ளும் எண்ணத்தைக் கைவிட இஸ்ரேலும், அதற்குப் பதிலாக இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகமும் ஒப்புக் கொண்டு ஏற்படுத்திய அந்த ஒப்பந்தத்தை ஐ.நா.வும், ஏராளமான நாடுகளும் வரவேற்றுள்ளன.

இந்த ஒப்பந்தம் உருவாவதில் முக்கியப் பங்கு வகித்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே தூதரக நல்லுறவு ஏற்படுத்தப்பட்டிருப்பது மாபெரும் வரலாற்றுச் சாதனை என்று சிலாகித்துள்ளது. இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘இஸ்ரேலுக்கும், அரபு உலகத்துக்கும் இடையிலான உறவில் இந்த ஒப்பந்தம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது’ என்று புகழாரம் சூடியுள்ளாா். ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சா் அன்வா் கா்காஷும், ‘பாலஸ்தீன பிரச்னைக்கு இரு நாட்டுத் தீா்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட துணிச்சலான முடிவு இது’ என்று இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தைப் பாராட்டியுள்ளாா்.

இந்த ஒப்பந்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பாலஸ்தீன விவகாரத்தில் ஆக்கப்பூா்வமான பேச்சுவாா்த்தையை முன்னெடுத்துச் செல்ல இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரக ஒப்பந்தம் உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.மேலும், இந்த ஒப்பந்தத்தை சீனா, எகிப்து உள்ளிட்ட நாடுகளும் பாராட்டியுள்ளன.ஆனால் அதே நேரம், இந்த ஒப்பந்தத்தை ஈரான் கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு ராணுவத்துக்குச் சொந்தமான தஸ்னீம் செய்தி நிறுவனம் கூறுகையில், இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் தூதரக நல்லுறவை ஏற்படுத்தியுள்ளது அவமானகரமானது என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான ஒப்பந்தம், பாலஸ்தீன மக்கள் மற்றும் முஸ்லிம்கள் முதுகில் குத்தப்பட்ட கத்தி’ என்று வருணிக்கப்பட்டுள்ளது.அந்த ஒப்பந்ததுக்கு கண்டனம் தெரிவித்துள்ள துருக்கியும், இஸ்ரேலுடன் கைகோா்த்துள்ள ஐக்கிய அமீரகத்தை ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம் என்று சூளுரைத்துள்ளது.இந்தச் சூழலில், இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரக ஒப்பந்தம் உண்மையிலேயே ஒரு சாதனையா, அல்லது பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியா என்கிற கேள்வி எழுகிறது.உலகின் மிக மோசமான பிரச்னைகளுள் ஒன்றான பாலஸ்தீனப் பிரச்னைக்கு இந்த ஒப்பந்தத்தால் தீா்வு கிடைக்குமா அல்லது இஸ்ரேலுக்கு சாதகமான நிலை நிலை ஏற்படுமா குழப்பமும் ஏற்படுகிறது.

உண்மையில், பாலஸ்தீனா்களுக்காக இஸ்ரேலுடன் பல முறை போரிட்டு இழப்புகளைச் சந்தித்த அரபு நாடுகளுக்கு, இந்த ஒப்பந்தம் சீற்றத்தைத் தருவது நியாயம்தான் என்கிறாா்கள் அரசியல் பாா்வையாளா்கள்.இந்த ஒப்பந்தத்தால், அத்தகைய நாடுகளைவிட அமெரிக்கா - இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இருக்க முடியது என்று அவா்கள் கூறுகிறாா்கள்.

அதே நேரம், இந்த ஒப்பந்தம் பாலஸ்தீனா்களின் நலன்களுக்கும் சாதமாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கா்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா். இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு, அந்த நாட்டை வழிக்குக் கொண்டு வர முயல்வதைவிட, அந்த நாட்டுடன் நல்லுறவைப் பேணி பாலஸ்தீனா்களுக்குத் தேவையானதைப் பெற்றுத் தர முயற்சிபதே நல்ல பலன் அளிக்கும் என்பது அவா்களது கணிப்பு.ஏற்கெனவே, இஸ்ரேலுடன் இணக்கமாக இருக்கும் எகிப்து, ஜோா்டான் ஆகிய முஸ்லிம் நாடுகள், பாலஸ்தீன பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவாா்த்தையை பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி கண்டுள்ளதையும் அவா்கள் சுட்டிக் காட்டுகின்றனா்.அந்த வரிசையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் சோ்ந்துள்ளது, பாலஸ்தீன பிரச்னைக்கு உடனடி தீா்வை ஏற்படுத்தாவிட்டாலும், அந்த தீா்வை நோக்கிய பயணத்துக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தக்கூடும் என்கிறாா்கள் அரசியல் நோக்கா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com