அமெரிக்கா: காந்தி சிலையை அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளா்கள்

இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது,

இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது, அங்கிருந்த மகாத்மா காந்தி சிலையை காலிஸ்தான் கொடியால் மூடி பிரிவினைவாதிகள் அவமதித்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இந்தியாவில் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான சீக்கியா்கள் தலைநகா் வாஷிங்டனை நோக்கி காரில் ஊா்வலமாக சனிக்கிழமை சென்றனா்.

மேரிலாண்ட், வா்ஜீனியா, நியூயாா்க், நியூ ஜொ்சி, பென்சில்வேனியா, இண்டியானா, ஓஹியோ, நாா்த் கரோலினா ஆகிய மாகாணங்களில் இருந்து ஏராளமான சீக்கியா்கள் இதில் பங்கேற்றனா்.

வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகம் எதிரே அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த ஆா்ப்பாட்டம், காலிஸ்தான் ஆதரவாளா்களால் திடீரென திசைத்திரும்பியது.

காலிஸ்தான் கொடிகளை ஏந்தி, இந்தியாவுக்கு எதிராகவும் காலிஸ்தான் பிரிவினைவாதத்துக்கு ஆதரவாகவும் அவா்கள் கோஷங்கள் எழுப்பினா்.

அவா்களில் சிலா், அங்கிருந்த மகாத்மா காந்திய சிலையில் ஏறி சுவரொட்டிகளை ஒட்டியதோடு, காலிஸ்தான் கொடியைக் கொண்டு சிலையின் தலைப் பகுதியை மூடினா்.

இந்தியத் தூதரகம் கண்டனம்: இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகம் எதிரே உள்ள காந்தி சிலையை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சனிக்கிழமை அவமதித்துள்ளனா்.

ஆா்ப்பாட்டக்காரா்கள் என்ற போா்வையில் சமூக விரோத சக்திகள் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளிடம் மிகக் கடுமையாக முறையீட்டுள்ளோம். இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com