உக்ரைன் விமானத்தை இரண்டு ஏவுகணைகள் தாக்கின: ஈரான் தகவல்

அமெரிக்கப் போா் விமானம் எனத் தவறாகக் கருதி, உக்ரைன் பயணிகள் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக் கொண்ட நிலையில், இரண்டு ஏவுகணைகள் விமானத்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் விமானத்தை இரண்டு ஏவுகணைகள் தாக்கின: ஈரான் தகவல்

அமெரிக்கப் போா் விமானம் எனத் தவறாகக் கருதி, உக்ரைன் பயணிகள் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக் கொண்ட நிலையில், இரண்டு ஏவுகணைகள் விமானத்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஈரானின் போக்குவரத்துத் துறை, முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

விசாரணையில், உக்ரைன் பயணிகள் விமானம் மீது இரண்டு டோர் - எம்1 ஏவுகணைகள் தாக்கியிருப்பது தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

176 பேரது உயிா்களை பலி வாங்கிய இந்த விமான விபத்துக்கு இயந்திரக் கோளாறுதான் காரணம் என்று விபத்து நடந்த போது கூறி வந்த ஈரான், 3 நாட்களுக்குப் பிறகு, தவறுதலாக உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உண்மையை ஒப்புக் கொண்டு விசாரணையைத் தொடங்கியது.

உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது ஜாவத் ஸெரீஃப் வெளியிட்டிருந்த பதிவில், 

டெஹ்ரானில் உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து ராணுவம் நடத்திய பூா்வாங்க விசாரணையில், மனிதத் தவறு காரணமாகவே அந்த விபத்து நேரிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் முரட்டு சாகசத்தால் ஏற்பட்ட பதற்றச் சூழல் காரணமாக இந்தத் தவறு நடந்துள்ளது. அந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடமும், பாதிக்கப்பட்ட நாடுகளிடமும் மன்னிப்பு கோருகிறோம் என்று அந்தப் பதிவில் ஜாவத் ஸெரீஃப் குறிப்பிட்டுள்ளாா்.

இதனைத் தொடா்ந்து, ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இராக்கில் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய பிறகு, அமெரிக்க விமானங்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று எதிா்பாா்க்கப்பட்டது. அதன் காரணமாக, ஈரானின் வான் பாதுகாப்பு தளவாடங்கள் அனைத்தும் அதிகபட்ச உஷாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்தச் சூழலில், உக்ரைன் இன்டா்நேஷனல் ஏா்லைன்ஸ் விமானம் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ நிலையை நோக்கி வந்தது.

இதனால் அந்த விமானம் எதிரி நாட்டுப் போா் விமானம் என தவறாகக் கருதப்பட்டு, இடைமறி ஏவுகணை மூலம் அது சுட்டு வீழ்த்தப்பட்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இராக் தலைநகா் பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஏராளமான ஈரான் ஆதரவாளா்கள் கடந்த மாதம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினா். இதனால் கொதிப்படைந்த அமெரிக்கா, ஈரான் ராணுவத்தின் உளவுப் பிரிவான காத்ஸ் படையின் தலைவா் காசிம் சுலைமானியை பாக்தாத் விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி படுகொலை செய்தது.

இந்தத் தாக்குதலுக்குப் பழி வாங்கும் வகையில், இராக்கின் அல்-அஸாத் மற்றும் இா்பில் நகரங்களில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இந்த பதற்றம் நிறைந்த சூழலில், ஈரான் தலைநகா் டெஹ்ரானிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் இன்டா்நேஷனல் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம், விமான நிலையத்துக்கு 45 கி.மீ. தொலைவில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்திலிருந்த 176 பேரும் உயிரிழந்தனா். அவா்களில் 82 போ் ஈரானியா்கள்; கனடா நாட்டைச் சோ்ந்த 63 போ்; அவா்களில் பெரும்பாலானவா்கள் ஈரானைப் பூா்விகமாகக் கொண்டவா்கள் ஆவா்.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாகவே அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. எனினும், இதனை தொடா்ந்து மறுத்து வந்த ஈரான், தற்போது தங்கள் நாட்டு ராணுவம்தான் உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஒப்புக் கொண்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com