நோய்நாடி நோய்முதல் நாடி! கரைசேருமா கவலையளிக்கும் கரோனா!

சீனாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் மனித இனத்திற்கான மற்றொரு சவாலாக உருவெடுத்துள்ளது கரோனா வைரஸ். 
நோய்நாடி நோய்முதல் நாடி! கரைசேருமா கவலையளிக்கும் கரோனா!

சீனாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் மனித இனத்திற்கான மற்றொரு சவாலாக உருவெடுத்துள்ளது கரோனா வைரஸ். 

எத்தனை, எத்தனையோ மருத்துவ சாதனைகளை புரிந்து, நோய் தொற்றுகளையும், தீராத வியாதிகளையும் வென்றுவிட்ட நமக்கு புதியதொரு அச்சுறுத்தலாக வந்திருக்கிறது கரோனா வைரஸ். சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு ஏற்பட்ட மா்மக் காய்ச்சல் குறித்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. சீனாவின் வுஹான் நகரின், 'குவானான் கடல் உணவு சந்தையில் அறுக்கப்பட்ட, ஏதோ ஒரு வகை வன விலங்கிடமிருந்தே இத்தகைய வைரஸ் பரவியிருப்பதாக தெரியவந்தது.

ஏற்கனவே, கோழிகளிடம் இருந்து, 'எச்.என். ஏவியன் இன்புளூயன்சா' என்ற நோய்தொற்றும், எலிகளிடம் இருந்து, 'லெப்டோஸ் பைரோசிஸ்' என்னும் காய்ச்சலும், வெறிநாய்களிடமிருந்து 'ரேபிஸ்' என்னும் நோய் தொற்றும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு சுவாசப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சார்ஸ் எனும் வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

அவற்றையெல்லாம் கடந்து வந்து விட்ட நிலையில் தற்போது கரோனா என்ற இந்த வைரஸ் பரவல் தீவிரமாகியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் இதுவரை இந்த வைரஸ் தாக்கியதில் 80 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வைரஸ் தாக்குதல் குறித்து முதன் முதலில் கடந்த டிசம்பர் 31 ஆம் நாள் உலக சுகாதார நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சீனாவில் மட்டுமல்லாமல் இந்த வைரஸ், பிரான்ஸ், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவிலும் பரவியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

புதிய வைரஸை கட்டுப்படுத்தவோ அழிப்பதற்கான வழிமுறையையோ விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அது எங்கிருந்து தோன்றியது, எவ்வாறு பரவுகிறது எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பது பற்றிய ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

பொதுவாக மனித உடலில் வைரஸ் தொற்று பரவினால் நோய் அறிகுறிகள் மூலம் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். ஆனால் புதிய வகை கரோனா வைரஸ் பரவி 14 நாட்கள் கழித்துதான், ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது தெரியவரும் என்றும் ஒருவர் உடலில் கரோனா வைரஸ் தொற்று இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்கு முன்பே அது மற்றவருக்கு பரவும் தன்மையுடையதாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
 
எனவே கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் சீன அரசு மிகுந்த கவனத்துடன் அதிவேக முயற்சியுடன் முனைப்பு காட்டி வருகிறது.

கரோனா வைரஸ் என்பது என்ன?

கரோனா வைரஸ் என்பது கரோனா வைரஸ்கள் கரோனவிரிடே எனப்படும் ஒருவகை வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவை, எலக்ட்ரான் நுண்ணோக்கியின் கீழ் அவை கூர்மையான மோதிரங்கள்போல தோற்றமளிக்கின்றன. இந்த கூர்முனைகளுக்கு கரோனா என பெயரிடப்பட்டுள்ளது. அவை அவற்றின் வைரஸ் உறைகளைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தை உருவாக்குகின்றன.

பொதுவாக, இந்த வகையான வைரஸ்கள் கால்நடைகள் முதல் வீட்டு செல்லப்பிராணிகள் மற்றும் வெளவால்கள் போன்ற வன விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவுகின்றன. அவை மனிதர்களுக்கு பரவும் போது, காய்ச்சல், சுவாச நோய் மற்றும் நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். வயதானவர்கள் அல்லது எச்.ஐ.வி-எய்ட்ஸ் உள்ளவர்கள் போன்ற நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களில், இத்தகைய வைரஸ்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

எங்கிருந்து வருகிறது கரோனா?

இந்த வைரஸ் பெய்ஜிங்கிற்கு தெற்கே 650 மைல் தொலைவில் உள்ள சீன நகரமான வூஹானில் உள்ள குவானான் என்ற கடல் உணவு மொத்த சந்தையில் மீன், வெளவால்கள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பிற விலங்குகளிடமிருந்து பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வூஹான் சந்தை ஜனவரி1 ஆம் தேதி மூடப்பட்டது.

மருத்துவ வைராலஜி என்ற ஜர்னலில் சீன ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஒரு அறிக்கையில், வைரஸின் மரபணுக் குறியீட்டை ஆராய்ந்து அதை இரண்டு வகையான பாம்புகளுடன் ஒப்பிட்ட போது பல்வேறு வகை கட்டுவிரியன் மற்றும் சீனநாகம் என்ற பாம்புகளின் மரபணுக்குறியீடு வைரஸுடன் அதிக அளவு ஒற்றுமை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து தொடரந்து வெளியிடப்பட்ட ஆய்வுகள் இதை மறுத்துள்ளதோடு, இது வெளவால்களில் இருந்து தோன்றியிருக்கலாம்  என்று தெரிவிக்கின்றன. மேலும் பாம்புகளில் இருந்து கரோனா பரவியதற்கான போதுமான ஆதாரம் இல்லை என்றும் இதுபற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டோரின் நிலவரம்:

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சீனாவில் 2,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் தைவான், ஹாங்காங் மற்றும் மக்காவில் 17 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில், தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, மலேசியா மற்றும் வியட்நாமில் ஒரு சிலருக்கும், அமெரிக்காவில், 5 பேருக்கும், கலிபோர்னியாவில் இரண்டு மற்றும் வாஷிங்டன், இல்லினாய்ஸ் மற்றும் அரிசோனாவில் தலா ஒருவருக்கும், ஆஸ்திரேலியாவில் பிரான்ஸில் மூன்று பேருக்கும், கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் மருத்துவ நிபுணர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வூஹான் நகருக்குச் சென்று தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கரோனா வைரஸை உறுதி செய்யும் முறை நானோ மீட்டர்களில் காணக்கூடிய எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் பயன்படுத்தி, மரபணுக் குறியீட்டை ஆய்வு செய்வதன்மூலம் கரோனா வைரஸ் தாக்கி இருக்கிறதா என்பதை காண முடியும். மரபணுக் குறியீட்டை ஆராய்வதன்மூலம் சிகிச்சை அளிக்க அல்லது தடுப்பூசிகளை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுளளது.

எப்படி பரவுகிறது கரோனா?

விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கு தொற்றிக் கொண்டிருந்தாலும் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. பரவும் வேகம் மற்றும் அதன் ஆற்றல் பற்றிய ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. சார்ஸ் மற்றும், மெர்ஸ் வைரஸ்களை விட இது சவால் நிறைந்ததாக இருப்பதாக கூறப்படுகிறது. நோய் பரவலை தடுக்க சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வூஹானில், கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை கட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். பிப்ரவரி 3 ஆம் தேதி இந்த வசதியை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது பாதுகாப்பு நடவடிக்கைக்காக வூஹானில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனப் புத்தாண்டு கொண்டாட்ட காலத்தில் அப்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்த புதிய வைரஸ் பாதிப்பு ஒரு பொது சுகாதார அவசர நிலையாக இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புதன்கிழமை கூறினார். 

அறிகுறிகள் என்ன?

கரோனா வைரஸ் ஒருவரை பிடித்துள்ளதா என்பதை உறுதி செய்வதற்கு முன் அவரது உடலில் தோன்றும் சில அறிகுறிகள் குறித்து ஜனவரி 24 அன்று, மருத்துவ இதழான திலான்செட் விரிவான ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதன்படி இந்த வைரஸ் கிருமி தொற்றியுள்ள ஒருவருக்கு முதலில் காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோர்வு மற்றும் தசைவலி, சுவாச கோளாறு ஆகியவை ஏற்படும். 

மேலும் கரோனா வைரஸின் குறைவான பொதுவான அறிகுறிகள் என்னவென்றால், சளி, தலைவலி, வயிற்றுப் போக்கு போன்றவை தென்பட்டாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் முற்றும் போது, நிமோனியா பாதிப்பு ஏற்படுகிறது. இது நுரையீரலை வீக்கப்படுத்துகிறது.
 
கரோனா வைரஸுக்கு சிகிச்சை உள்ளதா?

கரோனா வைரஸை அழிக்க கூடிய, சிகிச்சை முறையோ, தடுப்பூசிகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் பரவல் முறையை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது முற்றிலும் தடுக்க முடியாதவை என்று கூற முடியாது. சீன விஞ்ஞானிகள் வைரஸின் மரபணுக் குறியீட்டை நம்பமுடியாத அளவில் மிக விரைவாக வரிசைப்படுத்தி இருப்பதன் மூலம் நோயை எதிர்ப்பதற்கான வழிகளை அறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க தேசிய சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர்கள் ஒரு தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இது வெளியாக இன்னும் ஒரு வருடம் அல்லது அதற்குமேல் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

கரோனா வைரஸ் அபாயத்தை எவ்வாறு குறைப்பது?

சுத்தமாக கைகளை கழுவுதல், சுகாதாரமாக இருப்பது, முகமூடி அணிவது, பொது இடங்களில் பாதுகாப்பாக இருப்பது ஆகியவற்றின்அடிப்படையில், நோய் பரவுதலில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எது எப்படியோ..நோய் அறிந்து நோய்க்கான மூலக்காரணம் அறிந்து அதை தணிக்கும் வழியை அறிந்து சரியாக செயல்பட வேண்டும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். – என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப நாம் நம்மை பாதுகாத்துக் கொண்டால் கரோனாவில் இருந்து மட்டுமல்ல எத்தகைய வைரஸானாலும் நாம் மீண்டு எழலாம்.

தகவல்: சீன வானொலி நிலையம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com