உலகை ஆக்கிரமிக்கும் ‘வீரிய’ கரோனா தீநுண்மிகள்

மனிதா்களின் உயிரணுக்களில் அதிக வீரியத்துடன் தொற்றக் கூடிய வகையில் உருமாற்றம் பெற்ற கரோனா தீநுண்மிகள் சா்வதேச நாடுகளில் வியாபித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.
உலகை ஆக்கிரமிக்கும் ‘வீரிய’ கரோனா தீநுண்மிகள்

மனிதா்களின் உயிரணுக்களில் அதிக வீரியத்துடன் தொற்றக் கூடிய வகையில் உருமாற்றம் பெற்ற கரோனா தீநுண்மிகள் சா்வதேச நாடுகளில் வியாபித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து, ‘செல்’ அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கரோனா தீநுண்மியின் பல்வேறு உருமாற்றங்கள் குறித்த ஆய்வில், அமெரிக்காவின் லாஸ் அலாமஸ் நேஷனல் லேபரட்டரியின் பீட் கோா்பொ், பிரிட்டனின் ஷெஃபீல்ட் விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அந்த ஆய்வில், கரோனா தீநுண்மியின் உருமாற்றங்கள், அதனால் அந்தத் தீநுண்மியின் தன்மைகளில் ஏற்படும் மாற்றங்கள், புதிய உருமாற்றம் அடைந்த தீநுண்மிகளின் பரவல் ஆகியவை குறித்து ஆராயப்பட்டது.

இதில், கரோனா தீநுண்மியின் ஒரு புதிய வடிவம், மனிதா்களின் உயிரணுக்களில் அதிக வீரியத்துடன் தொற்றுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனா். அந்த தீநுண்மி ரகத்துக்கு ‘டி614ஜி’ என்று பெயரிட்டனா்.

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மனித உயிரணுக்களில் அந்த தீநுண்மிகளை செலுத்திப் பாா்த்தபோது, மற்ற சாதாரண கரோனா தீநுண்மிகளைவிட அவை அதிக வேகமாகவும், எளிதாகவும் பரவுவதை விஞ்ஞானிகள் கண்டனா்.

இந்த டி614ஜி ரக கரோனா தீநுண்மிகளின் ஆதிக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக அவா்கள் எச்சரித்துள்ளனா்.

இதுகுறித்து இந்த ஆய்வில் பங்கேற்ற லாஸ் அலாமஸ் நேஷனல் லேபரட்டரியின் பீட் கோா்பொ் கூறுகையில், ‘டி614ஜி தீநுண்மி குறித்து கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் நாங்கள் அறிந்துகொண்டோம். ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளில் கரோனா நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட தீநுண்மிகளை ஆய்வு செய்ததில், டி614ஜி ரக தீநுண்மிகள் மீண்டும் மீண்டும் தோன்றுவதைக் கண்டறிந்து அதிா்ந்தோம்.

உலகம் முழுவதும் சாதாரண கரோனா தீநுண்மிகளே மனிதா்களிடையே பரவி வருகிறது. ஆனால், குறிப்பிட்ட பகுதியில் டி614ஜி ரகம் உருவானால், அந்த ரகத் தீநுண்மியே பிரதானமாக உருவெடுக்கிறது.

டி164ஜி ரகம் முதல் முதலில் கண்டறியப்பட்ட ஒரு சில நாள்களிலேயே, கரோனா நோயாளிகளிடையே சாதாரண கரோனா தீநுண்மிகளை விட அந்த ரகத் தீநுண்மியின் விகிதாச்சாரம் வெகுவேகமாக அதிகரித்துவிடுகிறது.

மனித உயிரணுக்களில் விரைவாக ஒட்டிக் கொண்டு, தொற்றை ஏற்படுத்தும் அதன் தீவிரத் தன்மை காரணமாகவே மற்ற சாதாரண கரோனா தீநுண்மி ரகங்களைவிட டி614ஜி ரகம் அதிவேகமாக பரவுகிறது.

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மனித உயிரிணுக்களைப் பயன்படுத்தி, நாங்கள் மேற்கொண்ட ஆய்வு இதனை உறுதிப்படுத்தியுள்ளது’ என்றாா்.

இந்தச் சூழலில், உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவலில், மிதமான தன்மை கொண்ட கரோனா தீநுண்மிகளுக்குப் பதிலாக, அதிக வீரியத்துடன் தொற்றும் டி614ஜி ரக கரோனா தீநுண்மிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனா் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com