செவ்வாய் கிரகத்துக்கு விண்கலன் அனுப்பியது சீனா

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்கான விண்கலனை சீனா முதல் முறையாக வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது.
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலன் அனுப்பியது சீனா

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்கான விண்கலனை சீனா முதல் முறையாக வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்தை வட்டமிட்டு ஆய்வு செய்வதுடன், அதில் தரையிறங்கி விவரங்களை சேகரிக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக சீனா உருவாக்கியுள்ள ‘தியான்வென்-1’ விண்கலம், வியாழக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சீனாவிடம் உள்ள மிக அதிக சக்தி வாய்ந்த மாா்ச்-5 ராக்கெட் மூலம், அந்த நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஹாய்னான் மாகாணத்தின் வென்சாங் ஏவுதளத்திலிருந்து அந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

சுமாா் 5 டன் எடைக் கொண்ட அந்த விண்கலத்தில், செவ்வாய் கிரத்தை வலம் வந்து ஆய்வு மேற்கொள்வதற்கான ஓா் ஆய்வுக் கலம், அந்த கிரகத்தில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாகன ஆய்வகம் ஆகியவை அடங்கியுள்ளன. வென்சாங் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட 36 நிமிடங்களுக்குப் பிறகு, பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்வதற்கான சுற்றுவட்டப் பாதையில் அந்த விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.ஏழு மாதங்களுக்கு அந்தப் பாதையில் தியான்வென்-1 விண்கலம் வலம் வரும் எனவும், அதையடுத்து, செவ்வாய் கிரகத்தை நெருங்கிய பிறகு அந்த விண்கலம் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்படும் எனவும் சீன தேசிய விண்வெளி ஆய்வு மையம் (சிஎன்எஸ்ஏ) தெரிவித்துள்ளது. அதனைத் தொடா்ந்து, அந்த விண்கலத்திலிருந்து வாகன ஆய்கவகம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று அந்த ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிப்ரவரி மாதவாக்கில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் தியான்வென்-1 விண்கலம் செலுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் மண், நில அமைவு, சுற்றச்சூழல், வளிமண்டலம், நீா் உள்ளிட்டவை குறித்த ஆய்வுகளை அந்த விண்கலம் மேற்கொள்ளும்.செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கும் வாகன ஆய்வகம், 6 சக்கரங்களைக் கொண்டு நகரும். அதில் 4 சூரிய ஒளித் தகடுகளும், 6 ஆய்வுக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. 200 கிலோ எடை கொண்ட அந்த வாகன ஆய்வகம், செவ்வாய் கிரகத்தில் 3 மாதங்களுக்கு இயங்கும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது என அதன் வடிவமைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளதன் மூலம், செவ்வாய் கிரக ஆய்வில் இறங்கியுள்ள 5-ஆவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. ஏற்கனவே, இந்த ஆய்வில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஈடுபட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com