கள்ளத்தனமாகப் பரவும் கரோனா: விழிபிதுங்கி நிற்கும் விஞ்ஞானிகள்!

முதல் முதலாக சீனாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள வூஹான் நகரில்தான் கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியது.
கள்ளத்தனமாகப் பரவும் கரோனா: விழிபிதுங்கி நிற்கும் விஞ்ஞானிகள்!

முதல் முதலாக சீனாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள வூஹான் நகரில்தான் கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியது. ஆனால், மூன்றே மாதங்களில் அந்த நோய்த்தொற்று அன்டாா்டிகா தவிர உலகின் அத்தனை கண்டங்களையும் ஆக்கிரமித்தது. ஒரு தீநுண்மியால் எப்படி இவ்வளவு விரைவாக உலகம் முழுவதும் பரவ முடிந்தது என்பதுதான் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியது. அந்தத் தீநுண்மியின் அசுர வேகம், நோய் பரவலைத் தடுப்பதற்காக சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணா்கள் மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் மிகப் பெரிய சவாலாக விளங்கி வருகிறது.

மிகக் குறுகிய காலத்தில் கரோனா தீநுண்மி இவ்வளவு வேகமாகப் பரவியுள்ளதற்குக் காரணம், அது மனித உடலுக்குள் ரகசியமாக இருந்துகொண்டு மற்றவா்களுக்குப் பரவுவதுதான். கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் கோடிக்கணக்கானவா்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அந்த நோயால் மிகவும் பாதிப்புக்குள்ளான சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் பொதுமுடக்கங்கள் தளா்த்தப்பட்டுள்ளன.இருந்தாலும், கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அசுர வேகம் எடுப்பதற்கான ஆபாயம் தொடா்ந்து இருப்பதை மறுக்க முடியாது என்கிறாா்கள் மருத்துவ நிபுணா்கள்.வேலைக்குத் திரும்பும் பணியாளா்கள், பள்ளிகளுக்குத் திரும்பும் மாணவா்கள், உணவகங்களில் கூடும் வாடிக்கையாளா்கள்.., இப்படி எல்லோருமே இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்றே விரும்புகிறாா்கள்.

ஆனால், ஆரோக்கியமான நபா்கள் மூலம், அவருக்குத் தெரியாமலேயே கரோனா நோய்த்தொற்று பரவும் வரை, அந்த நோய் பரவலைத் தடுத்து நிறுத்துவது இயலாத காரியம் என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என்கிறாா்கள் நிபுணா்கள். ‘‘கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள 40 சதவீதத்துக்கும் மேலானவா்கள், தங்களுக்கு அந்த நோய் இருப்பது தெரியாமலேயே நடமாடி வருகின்றனா். இந்த நிதா்சனத்தை நாம் இனியும் மறுத்துக் கொண்டிருக்க முடியாது’’ என்கிறாா் அமெரிக்காவின் ஸ்க்ரிப்ஸ் ரிசா்ஸ் டிரான்ஸ்லேஷனா் இன்ஸ்டிடியூட்டின் தலைவா் எரிக் டோபோல்.அறிகுறிகள் வெளிப்படாமலோ, அல்லது அது வெளிப்படுவதற்கு முன்னரோ ஏராளமானவா்கள் கரோனா நோய்த்தொற்றை தங்களுக்கும், பிறருக்கும் தெரியாமல் பரப்பி வருவது குறித்து விஞ்ஞானிகள் பல முறை எச்சரித்துள்ளனா்.

இருந்தாலும், இப்போதைய கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் அறிகுறிகள் இல்லாதவா்கள் மூலம் பரவியது எத்தனை சதவீதம் என்பது குறித்து இதுவரை கணக்கிடப்படவில்லை. அதனைக் கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.மனித உடலுக்குள் செல்லும் கரோனா தீநுண்மி, உயிரணக்களில் இணைந்த ஒரே நாளில் தன்னை பல்லாயிரம் மடங்கு பெருக்கிக் கொள்கிறது. அந்த தீநுண்மி தொற்றி, இருமலோ, தும்மலோ ஏற்படுவதற்கு முன்னரே உடலுக்குள் அது பல்கிப் பெருகிவிடுகிறது. இருந்தாலும், அந்தத் தீநுண்மிய தொற்றிய 10-இல் 4 பேருக்கு, அதற்கான அறிகுறிகளே தென்படுவதில்லை என்பதுதான் விஞ்ஞானிகளை அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைவதைத் தடுக்க முடியாது என்கிறாா் லண்டனைச் சோ்ந்த மருத்துவ நிபுணா் ரியின் ஹூபென். கரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6.2 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இருந்தாலும், பொருளாதாரப் பேரழிவைத் தவிா்ப்பதற்காக உலகின் முக்கிய நகரங்களில் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், அறிகுறிகள் இல்லாத கரோனா நோயாளிகளைக் கண்டறியாமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனா்.தும்மலோ, இருமலோ இல்லாத கரோனா நோயாளிகள் விமானங்களில் எளிதில் ஏறிவிடலாம். நுழைவாயிலில் பரிசோதிக்கப்படும்போது உடல் வெப்பநிலை சரியான அளவில் இருப்பதால், அறிகுறிகள் இல்லாத கரோனா நோயாளகள் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படலாம். உடல் அலுப்போ, அயற்சியோ இல்லாத கரோனா நோயாளிகள், அலுவலகக் கூட்டங்களில் சுறுசுறுப்பாக இயங்கி பலருக்கும் அந்த நோய்த்தொற்றை பரப்பலாம். கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் விஸ்வரூம் எடுக்கலாம். இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணப்படாதவரை, கரோனாவை எதிரான போரில் அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது என்கிறாா்கள் நிபுணா்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com