ஆபத்தில் தோள் கொடுக்கும் உற்ற நண்பன் சீனா

ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகாது, இரு கை தட்டினால் மட்டுமே ஓசை வரும். ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால்தான் பயன் என்று கூறுவதற்கு மேற்கூறப்பட்ட பழமொழியை அவ்வப்போது தெரிவிப்பது வழக்கம்.
ஆபத்தில் தோள் கொடுக்கும் உற்ற நண்பன் சீனா
ஆபத்தில் தோள் கொடுக்கும் உற்ற நண்பன் சீனா

ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகாது, இரு கை தட்டினால் மட்டுமே ஓசை வரும். ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால்தான் பயன் என்று கூறுவதற்கு மேற்கூறப்பட்ட பழமொழியை அவ்வப்போது தெரிவிப்பது வழக்கம்.

கொவைட்-19 தொற்றுநோயால் முதலில் பாதிக்கப்பட்ட நாடு சீனா என்றாலும்,  நோயை முதலில் கட்டுக்குள் கொண்டு வந்த நாடாகவும் சீனா உள்ளது. அதற்கு பெரும் விலையைச் சீனா கொடுத்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வூஹானில் 15 நாள்களுக்குள் மருத்துவமனைகள், நூற்றுக்கணக்கான அவசர ஊர்திகள் தருவிப்பு, மிக விரைவாக மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்துதல் முகாம்கள், அனுதினமும் லட்சக்கணக்கில் நியூக்ளிக் சோதனைகள், பாதிக்கப்பட்ட நபரின் நடமாட்டத்தை உயர் தொழில்நுட்பம் கொண்டு கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுத்தல், நோயாளிகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்தியது, இலவச பரிசோதனை என தேவையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டதுதான் அதற்குக் காரணம்.

இந்நிலையில், பல்வேறு நாடுகளுக்கும் இந்நோய் பரவத் தொடங்கியது. ஆரம்பக் கட்டத்தில் தான் சந்தித்த பிரச்னைகள் மற்ற நாடுகள் எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு மருத்துவ உபகரணங்கள், நிதியுதவி, அனுபவங்களைப் பகிர்தல், மருத்துவக் குழுக்களை அனுப்புதல், காணொளி மூலம் ஆலோசனை அளித்தல் என பல்வேறு பணிகளை பல நாடுகளுடன் சீனா மேற்கொண்டது. இதற்கு பல நாடுகள் மனதார நன்றி தெரிவித்தன. உண்மையான நண்பனை ஆபத்தில் அறிந்து கொள்ள முடியும் என்று கூறுவதற்கேற்ப, இந்த இக்கட்டான காலத்தில் தனது தோழமை நாடுகளுக்கு சீனா உண்மையான நண்பனாக நடந்து கொண்டு வருகிறது.

வளர்ந்த ஐரோப்பிய நாடுகள், வளர்ச்சி குன்றிய ஆப்பிரிக்க நாடுகள் என பாரபட்சமின்றி எங்கு தேவையோ அங்கு சீனா ஓடோடிச் சென்று உதவிக்கரம் நீட்டியதை அந்நாடுகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டிய வண்ணம் உள்ளனர். அறிவியல் ரீதியில் பார்க்க வேண்டிய இவ்விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தில் காணக்கூடாது என சீனா பலமுறை அமெரிக்காவுக்குத் தெரிவித்தும் அதற்கு அமெரிக்கா செவிசாய்க்கவில்லை.

ஆரம்பக் கட்டத்தில் சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க காலதாமதம் காட்டியது. அதற்கான விலையை அமெரிக்கா தற்போது அளித்துக் கொண்டிருக்கிறது. புதிய ரக கரோனா வைரஸ் பற்றிய நமது புரிதல் குறைவு, அதனால், புதிதாக பாதிப்பே இல்லை என்றாலும், கண்டிப்பு நடவடிக்கைகளத் தளர்த்தாமல் தொடர்ந்து விழிப்புடன் இருந்திட வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஒன்றாக இணைந்து நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒத்துழைப்பில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இணைந்து சீனா செயலாற்றி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா போன்று அரசியல் செய்து மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்காமல் இருப்பது ஒரு கை தட்டி ஓசை எழுப்ப முயல்வது போன்றாகி விடும்; நோயைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாததாகி விடும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com