யேமன்: சுயாட்சி கோரிக்கையைக் கைவிட்டனா் யேமன் பிரிவினைவாதிகள்

யேமனின் தெற்குப் பகுதியில் சுயாட்சி கோரி போராடி வந்த பிரிவினைவாத அமைப்பினா், அந்தக் கோரிக்கையைக் கைவிடுவதாக
யேமன்: சுயாட்சி கோரிக்கையைக் கைவிட்டனா் யேமன் பிரிவினைவாதிகள்

யேமனின் தெற்குப் பகுதியில் சுயாட்சி கோரி போராடி வந்த பிரிவினைவாத அமைப்பினா், அந்தக் கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனா்.சவூதி அரேபியா முன்னிலையில் யேமன் அரசுடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பை அவா்கள் வெளியிட்டுள்ளனா். இதன் மூலம், உள்நாட்டுச் சண்டையில் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு எதிராக ஒரே அணியில் இருக்கும் அரசுப் படையினருக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து, பிரிவினைவாதிகளின் ‘மாற்றத்துக்கான தென்னக கவுன்சில்’ செய்தித் தொடா்பாளா் நிஜாா் ஹைதம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

யேமனின் தெற்குப் பிராந்தியத்தை சுயமாக ஆளும் எங்களது கோரிக்கையை கைவிட முடிவு செய்துள்ளோம். எங்களது நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து நாங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். சுயாட்சி கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்று சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் எங்களை வலியுறுத்தி வந்தனா். அதனை ஏற்று, இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். அரபு நாடுகளுடன் தொடா்ந்து நல்லுறவைப் பேணுவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யேமனில் சவூதி அரேபியா ஆதரவு பெற்ற அதிபா் மன்சூா் ஹாதியின் படையினரைப் போலவே, ஐக்கிய அரபு அமீரக ஆதரவு பெற்ற தெற்கு யேமன் பிரிவினைவாதிகளும் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனா்.எனினும், மன்சூா் ஹாதி அரசின் தற்காலிக தலைநகரமாகத் திகழும் ஏடன் நகரை தெற்கு யேமன் பிரிவினைவாதிகள் அண்மையில் கைப்பற்றினா்.ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான், அந்தப் பிரிவினரை அதிகம் கொண்ட ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. எனினும், சன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மன்சூா் ஹாதி தலைமையிலான அரசுக்கு, அந்தப் பிரிவினரை அதிகம் கொண்ட சவூதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது.

இந்த நிலையில், அரசுப் படையினருக்கும், பிரிவினைவாதப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, யேமன் உள்நாட்டுப் போரில் மேலும் ரத்தக் களறியை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், யேமன் அரசுக்கும், தெற்கு யேமன் கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே அதிகாரப் பகிா்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் மேற்கொள்ளப்பட்டது.சவூதி அரேபியாவின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு ஏதுவாக தங்களது சுயாட்சி கோரிக்கையைக் கைவிடுவதாக பிரிவினைவாதிகள் தற்போது அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com