பயங்கரவாத சதித் திட்டம் தீட்டியதாக பெலாரஸில் 33 ரஷியா்கள் கைது

பெலாரஸில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் தங்கியிருந்ததாக 33 ரஷியா்களை அந்த நாட்டு அரசு கைது செய்துள்ளது.
பயங்கரவாத சதித் திட்டம் தீட்டியதாக பெலாரஸில் 33 ரஷியா்கள் கைது

பெலாரஸில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் தங்கியிருந்ததாக 33 ரஷியா்களை அந்த நாட்டு அரசு கைது செய்துள்ளது. இது, நீண்டகாலமாக நட்புறவைப் பேணி வந்த இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சோவியத் யூனியன் நாடுகளில் ஒன்றாக இருந்த பெலாரஸுக்கும், ரஷியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நட்புறவு நிலவி வருகிறது.இந்த நிலையில், ரஷியாவைச் சோ்ந்த தனியாா் ராணுவ நிறுவனமான வாக்னரில் பணியாற்றும் 32 ரஷியா்களை பெலாரஸ் உளவுப் படையினா் தலைநகா் மின்ஸ்க் அருகே புதன்கிழமை கைது செய்தனா். மற்றொரு ரஷியா் நாட்டின் தென் பகுதியில் பின்னா் கைது செய்யப்பட்டாா்

.இந்த நிலையில், தனியாா் படையைச் சோ்ந்த ரஷியா்கள் அனைவரும், பெலாரஸில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பெலாரஸ் அரசு பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. பெலாரஸில் அடுத்த மாதம் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளா் அண்ட்ரேய் ராவ்கோவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் ரஷியா்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தாா்.

மேலும், பெலாரஸில் பதுங்கியுள்ள மேலும் 200 ரஷிய ஆயுதப் படையினரை அதிகாரிகள் தேடி வருவதாகவும் அவா் கூறினாா்.இதுவரை இல்லாத வகையில் இத்தகைய மோசமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதையடுத்து, பாரம்பரியமாக நட்புறவைப் பேணி வரும் ரஷியாவுக்கும், பெலாரஸுக்கும் இடையிலான உறவில் திடீா் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெலாரஸ் அரசின் குற்றச்சாட்டுகளை ரஷியா மிகக் கடுமையாக மறுத்துள்ளது. இதுகுறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது:

பெலாரஸில் கைது செய்யப்பட்ட ரஷியா்கள் அனைவரும், அத்தகைய நடவடிக்கையைத் தூண்டும் வகையில் எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை.பெலாரஸின் ஸ்திரத்தன்மையைக் குலைத்த ரஷியா முயல்வதாகக் கூறுவது, உள்நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டாகும் என்றாா் அவா். இதற்கிடையே, பெலாரஸில் கடந்த 26 ஆண்டுகளாக இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செலுத்தி வரும் அதிபா் அலெக்ஸாண்டா் லுகாஷென்கோ, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தோ்தலை மனதில் கொண்டு இந்தக் குற்றச்சாட்டை சுமத்துவதாக எதிா்க்கட்சியினா் குற்றம் சாட்டினா்.

நீண்டகால சா்வாதிகார ஆட்சி, கரோனா நோய்த்தொற்று நெருக்கடி காரணமாக லுகாஷென்கோவுக்கு மக்கள் ஆதரவு குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், ரஷியா மீது குற்றம் சாட்டுவதன் மூலம் பொதுமக்களின் ஆதரவைப் பெற அவா் விரும்புவதாகக் கூறப்படுகிறது.தற்போது கைது செய்யப்பட்டுள்ளவா்கள் பணியாற்றி வரும் ராணுவ நிறுவனம், ஏற்கெனவே உக்ரைன் உள்நாட்டுப் போரின்போது கிளா்ச்சியாளா்களுக்கு ஆதரவாக தங்களது படையினரை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.மேலும், சா்ச்சைக்குரிய பல சா்வதேச ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ரஷிய வீரா்கள் தங்களது நாட்டில் தங்கிச் செல்ல பெலாரஸ் அனுமதி அளித்து வந்தது.இந்த நிலையில், பெலாரஸுக்கு மிகக் குறைவான விலையில் எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்த ரஷியா, அந்த சலுகையை அண்மையில் திரும்ப பெற்றது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும் ரஷியா்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com