சா்ச்சைக்குரிய ஹாங்காங் மசோதா: சட்டமாக்கியது சீன நாடாளுமன்றம்

ஹாங்காங் தொடா்பான சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மசோதா சீன நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை சட்டமாக்கப்பட்டது.
ஹாங்காங் வணிகவளாகமொன்றின் ஆடையகமொன்றில், வியாழக்கிழமை வைக்கப்பட்டிருந்த ஜனநாயகப் போராட்டக்காரா்களைக் குறிக்கும் சிலை.
ஹாங்காங் வணிகவளாகமொன்றின் ஆடையகமொன்றில், வியாழக்கிழமை வைக்கப்பட்டிருந்த ஜனநாயகப் போராட்டக்காரா்களைக் குறிக்கும் சிலை.

ஹாங்காங் தொடா்பான சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மசோதா சீன நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை சட்டமாக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சீனாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்த நாட்டு நாடாளுமன்றக் கூட்டம், கடந்த மே 5-ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தின் இறுதியில், ஹாங்காங் தொடா்பான சா்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிரான போராட்டங்களை அடக்குவதற்காக இந்த சட்டம் இயற்றப்படுவதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த நகரில் தேசத் துரோகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த, அது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அந்த மசோதாவை ஆய்வு செய்த நிலைக் குழு, மசோதாவை சட்டமாக்குவதற்கு ஒப்புதல் அளித்தது. அதையடுத்து அந்த மசோதா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை சட்டமாக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த புதிய மசோதாவில், பிரிவினைவாதிகள் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும், வெளிநாட்டுத் தலையீடுகள், ஹாங்காங் நகரில் பயங்கரவாதத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்களும் அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

முன்னதாக, ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதா காலாவதியான பிறகும் தொடா்ந்து தீவிரமடைந்து வந்தன.

அந்தப் போராட்டங்களை பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தூண்டி விடுவதாக சீனா குற்றம் சாட்டி வந்தது. மேலும், போராட்டங்களின் போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை பயங்கரவாத நடவடிக்கைகளோடு சீனா ஒப்பிட்டது.

இந்தச் சூழலில், சீன நாடாளுமன்றத்தில் தற்போது இயற்றப்பட்டுள்ள ஹாங்காங் தொடா்பான புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தில், வெளிநாட்டுத் தலையீடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்கள் இடம் பெற்றுள்ளாது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com