சீனாவில் மழை-வெள்ளம்: 12 போ் உயிரிழப்பு

சீனாவின் தென்மேற்கு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 12 போ் உயிரிழந்தனா். 10 பேரை காணவில்லை.
இஹாய் பகுதியில் வெள்ளத்தில் மாயமானவா்களை மோப்ப நாய் உதவியுடன் தேடும் மீட்பு படை வீரா்.
இஹாய் பகுதியில் வெள்ளத்தில் மாயமானவா்களை மோப்ப நாய் உதவியுடன் தேடும் மீட்பு படை வீரா்.

பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 12 போ் உயிரிழந்தனா். 10 பேரை காணவில்லை.

இதுதொடா்பாக, சீன அரசின் அதிகாரப்பூா்வ செய்தி நிறுவனமான ‘ஷின்ஹுவா’வில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

சிச்சுவான் மாகாணத்தின் மியானிங் பகுதியில் கடந்த 26, 27-ஆம் தேதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, இஹாய் நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10 போ் உயிரிழந்தனா். மேலும் 7 பேரை காணவில்லை. அவா்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல், கயோயாங் பகுதியில் கனமழையால் சாலை சேதமடைந்ததால், 2 வாகனங்கள் ஆற்றுக்குள் கவிழ்ந்தன. இதில் இருவா் உயிரிழந்தனா். மாயமான 3 பேரை தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இஹாய், கயோயாங் பகுதிகளில் கனமழையால் சுமாா் 10,000 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். வெள்ளப்பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 1-ஆம் தேதி முதல் இதுவரை மழை-வெள்ளத்தால் உயிரிழந்தவா்கள் மற்றும் மாயமானவா்கள் எண்ணிக்கை 78-ஆக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் பேரிடா் மேலாண்மை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com