கரோனா வைரஸ்: ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சா், கனடா பிரதமா் மனைவிக்கு பாதிப்பு

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சா் பீட்டா் டட்டானுக்கும், கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரெகோயிருக்கும் கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ்: ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சா், கனடா பிரதமா் மனைவிக்கு பாதிப்பு

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கும் கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதுகுறித்து பீட்டர் டட்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 காலையில் எழுந்தபோது எனக்கு காய்ச்சலும், தொண்டைக் கட்டும் இருந்தது. அதையடுத்து, எனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 சுகாதாரத் துறையின் விதிமுறைகளின்படி, யாருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
 எனவே, அந்த விதிமுறையைப் பின்பற்றி, நானும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்றார் அவர்.
 ஆஸ்திரேலிய அரசில் மிகவும் செல்வாக்கு மிக்கவரான அமைச்சர் பீட்டர் டட்டன், சர்ச்சைக்குரிய குடியேற்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டதில் முக்கியப் பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 கனடா பிரதமரின் மனைவி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரெகோயிக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதுகுறித்து அந்த நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 பிரதமர் ட்ரூடோவுக்கும், அவரது மனைவி சோஃபிக்கும் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
 அந்தப் பரிசோதனையின் முடிவுகளில், சோஃபிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 எனினும், பிரதமருக்கு அந்த வைரஸ் பாதிப்பு இல்லை. அவர், கரோனா வைரஸ் அறிகுறிகளின்றி ஆரோக்கியமாக உள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 ஒட்டு மொத்தமாக ஆஸ்திரேலியாவில் 199 பேருக்கும் கனடாவில் 158 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த இரு நாடுகளிலும் 4 பேர் (ஆஸ்திரேலியாவில் 3 பேர், கனடாவில் ஒருவர்) கரோனா வைரஸுக்கு பலியாகினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com