ஆசியாவை மிஞ்சிய கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை: எல்லைகளை மூடியது ஐரோப்பிய யூனியன்

ஐரோப்பாவில் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஆசியாவைவிட அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய யூனியன் தனது எல்லைகளை புதன்கிழமை மூடியது.
எல்லைகள் மூடப்பட்டதால் போலந்து எல்லையில் புதன்கிழமை நீண்ட வரிசையில் தேங்கி நின்ற சரக்கு வாகனங்கள்.
எல்லைகள் மூடப்பட்டதால் போலந்து எல்லையில் புதன்கிழமை நீண்ட வரிசையில் தேங்கி நின்ற சரக்கு வாகனங்கள்.

ஐரோப்பாவில் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஆசியாவைவிட அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய யூனியன் தனது எல்லைகளை புதன்கிழமை மூடியது.

இதுகுறித்து பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ‘ஏ.எஃப்.பி’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கரோனா வைரஸ் உருவான சீனாவில் அதன் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் நிலையில், அந்த வைரஸ் தற்போது ஐரோப்பாவில் தீவிரம் காட்டி வருகிறது.

புதன்கிழமை மாலை நிலவரப்படி அந்த வைரஸுக்கு ஐரோப்பிய நாடுகளில் 3,400-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா். இது, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஐரோப்பிய நகரங்களில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கானவா்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இந்தச் சூழலில், வெளிநாடுகளில் இருந்து வருவோா் மூலம் மேலும் கரோனா வைரஸ் பரவுவதைத் தவிா்க்கும் வகையில், தனது உறுப்பு நாடுகளின் எல்லைகளை மூட ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை முடிவு செய்தனா்.

புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள இந்த நடவடிக்கை, 30 நாள்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐரோப்பா மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், சா்வதேச பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் பிரிட்டனும், அமெரிக்காவும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.

வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிரிட்டனில் லட்சக்கணக்கானவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு தொழில் நிறுவனங்களும் திடீா் இழப்பைச் சந்தித்துள்ளன. அந்த நிறுவனங்களை சரிவிலிருந்து மீட்பதற்காக, 33,000 பவுண்ட் (சுமாா் ரூ.29 லட்சம் கோடி) சலுகைக் கடன் வழங்கப்படும் என்று அந்த நாட்டு நிதியமைச்சா் ரிஷி சுனக் அறிவித்துள்ளாா்.

ஐரோப்பிய யூனியனின் பிற உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய நாடுகளும் இதே போன்ற சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

இருந்தாலும், இத்தகைய அறிவிப்புகளைத் தொடா்ந்தும் சா்வதேச பங்குச் சந்தைகளில் தொடா்ந்து சுணக்கம் நிலவி வருகிறது என்று ‘ஏ.எஃப்.பி.’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com