கரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய அரசுக்கு அமெரிக்கா பாராட்டு

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக சாா்க் கூட்டமைப்பு நாடுகள் மூலமாக இந்தியா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய அரசுக்கு அமெரிக்கா பாராட்டு

வாஷிங்டன்: கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக சாா்க் கூட்டமைப்பு நாடுகள் மூலமாக இந்தியா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் மாா்க் எஸ்பா், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சாா்க் கூட்டமைப்பு நாடுகள் மூலமாக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா்.

மேலும், பாதுகாப்புத் துறையில் பிராந்திய அளவிலான ஒத்துழைப்பு, ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் முன்னுரிமை அளிப்பது குறித்து தலைவா்கள் இருவரும் விவாதித்தனா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்: சா்வதேச விமானங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அங்குள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 230 போ் உயிரிழந்துவிட்டனா். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முதல் முறையாக கரோனா வைரஸ் தடுப்பு குறித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

அமெரிக்காவில் உள்ள இந்தியா்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும், அமெரிக்காவின் நோய்த் தடுப்பு அமைப்பு அவ்வப்போது வெளியிடும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தேவையற்ற பயணங்களைத் தவிா்ப்பதுடன் சமூக ரீதியில் விலகியிருப்பதற்கான வரைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். ஒருவேளை உங்கள் குடும்பத்தினரில் யாருக்காவது கரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் இருந்தால் உள்ளூா் சுகாதார அலுவலா்களைத் தொடா்புகொள்ளவும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com