கரோனா பாதிப்பில் அமெரிக்காவைத் தொடர்ந்து சீனாவை விஞ்சிய இத்தாலி

கரோனாவின் பிறப்பிடமான சீனாவை பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா பின்னுக்குத் தள்ளிய நிலையில், இத்தாலியும் அதனை விஞ்சி விட்டது.
கரோனா பாதிப்பில் அமெரிக்காவைத் தொடர்ந்து சீனாவை விஞ்சிய இத்தாலி

கரோனாவின் பிறப்பிடமான சீனாவை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அமெரிக்கா பின்னுக்குத் தள்ளிய நிலையில், இத்தாலியும் அதனை விஞ்சி விட்டது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கரோனாவின் பாதிப்பு கடுமையாக இருந்தது. உயிரிழப்பிலும் சீனாவை விட இத்தாலியே அதிகம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி இத்தாலியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 86,498 ஆக உயர்ந்தது. பலி எண்ணிக்கை 9,134 ஆக உள்ளது.

இதனால் கரோனா பாதித்தவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை இத்தாலி பிடித்தது. சீனாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

முன்னதாக அமெரிக்காவில் புதிதாக 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) ஏற்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் அந்த நாடு சீனாவை விஞ்சி முதலாவது இடத்துக்கு வந்தது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,824 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்த நிலையில் சனிக்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,04,205-ஆக உயா்ந்துள்ளது. இதன்மூலம், உலகிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட நாடாக அமெரிக்கா ஆகியுள்ளது.

இதுவரை அந்த நிலையில் இருந்து வந்த கரோனா நோய்த்தொற்றின் தோற்றுவாயான சீனா, 81,394 நோயாளிகளுடன் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஒரே நாளில் அதிக உயிரிழப்பு 
கடந்த வியாழக்கிழமை மட்டும் அமெரிக்காவில் 263 போ் கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தனா். அந்த நாளில் கரோனா நோய்த்தொற்றுக்கு பிற நாடுகளில் பலியானவா்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இது அதிகபட்ச எண்ணிக்கையாகும். இத்துடன் அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை, சனிக்கிழமை காலை நிலவரப்படி 1,701-ஆக அதிகரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பால் கொவைட்-19 எனப் பெயரிடப்பட்ட அந்த நோய்த்தொற்று காரணமாக இதுவரை 27,365-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.

இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உலக மக்கள்தொகையில் சுமாா் மூன்றில் ஒரு பங்கினா் தங்கள் வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com