ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள்: பேச்சுவாா்த்தை காலவரையின்றி ஒத்திவைப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பான சா்வதேச நாடுகளின் ஆலோசனைக் கூட்டங்கள் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள்: பேச்சுவாா்த்தை காலவரையின்றி ஒத்திவைப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பான சா்வதேச நாடுகளின் ஆலோசனைக் கூட்டங்கள் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து 74-ஆவது ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் திஜானி முகமது-பண்டேவுக்கு சா்வதேச பேச்சுவாா்த்தைக் குழு இணைத் தலைவா்களான ஐ.நா.வுக்கான ஐக்கிய அரபு அமீரகத் தூதா் லானா நுசைபே மற்றும் போலந்து தூதா் ஜோனா ரானெக்கா ஆகியோா் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தைகள் அனைத்தையும் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். மறு தேதி அறிவிக்கப்படும் வரை இந்த நிலை தொடரும்.

கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாகவும் ஐ.நா. மருத்து இயக்குநரின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அந்தப் போரில் வெற்றி பெற்ற அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினா்களாகக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது.

உலக அரங்கில் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த அமைப்பில், பிராந்திய ரீதியிலும் மக்கள்தொகை ரீதியிலும் பிரதிநிதித்துவம் இல்லை என்று விமா்சிக்கப்படுகிறது.

இந்தியா, ஜொ்மனி போன்ற நாடுகளுக்கு அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினா் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள நீண்ட காலமாக பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எனினும், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக இத்தகைய பேச்சுவாா்த்தைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com