'காற்றில் வைரஸ் பரவாமல் தடுக்க ஆறு அடி தூர இடைவெளி போதாது'

காற்றில் வைரஸ் பரவலைத் தடுக்க ஆறு அடி தூர இடைவெளி போதாது என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது. 
'காற்றில் வைரஸ் பரவாமல் தடுக்க ஆறு அடி தூர இடைவெளி போதாது'

காற்றில் வைரஸ் பரவலைத் தடுக்க ஆறு அடி தூர இடைவெளி போதாது என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது. 

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸ் காற்றில் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து சைப்ரஸில் உள்ள நிக்கோசியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 

இதில், கரோனா பரவலைத் தடுக்க குறைந்தது 3 முதல் 6 அடி தூரம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பல்வேறு நாட்டின் அரசுகளால் அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், காற்றில் வைரஸ் பரவுவதை தடுக்க ஆறு அடி தூர இடைவெளி போதாது என்று தெரிய வந்துள்ளது. 

ஆய்வின்படி, குறைந்த காற்றின் வேகத்தில் லேசான இருமலில் உள்ள உமிழ்நீர் துளிகள் 18 அடி தூரம் வரை செல்லும் என்றும் எனவே, கரோனா பரவுவதைத் தடுக்க மக்கள் கூடுதல் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இயற்பியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மணிக்கு நான்கு கிலோமீட்டர் வேகத்தில் உள்ள காற்றில் உமிழ்நீர் 5 வினாடிகளில் 18 அடி தூரம் பயணிக்கிறது. இது பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரையும் பாதிக்கும். எனினும், உயரம் குறைவானவர்களிடையே இது அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிக்கோசியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் டிமிட்ரிஸ் டிரிகாக்கிஸ் கூறுகிறார்.

மேலும் ஆய்வாளர்கள் கூறுகையில், 'உமிழ்நீர் ஒரு சிக்கலான திரவம். இருமல் மூலமாக வெளியாகும் உமிழ்நீர் சுற்றியுள்ள காற்றில் நிறுத்தி வைக்கப்படுகிறது.மேலும் உமிழ்நீர்த் துளிகள் காற்றில் எவ்வாறு பயணிக்கின்றன என்பதைப் பல காரணிகள் நிர்ணயிக்கின்றன. நீர்த்துளிகளின் அளவு மற்றும் எண்ணிக்கை, அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்பு கொள்கின்றன மற்றும் அவை சிதறிக்கொண்டு ஆவியாகும்போது சுற்றியுள்ள காற்றின் வெப்பம், நிறை, ஈரப்பதம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. 

இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 1,008 உருவகப்படுத்தப்பட்ட உமிழ்நீர்த் துளிகளின் விதிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. உமிழ்நீர்த் துளியை உருவகப்படுத்துதலின் மூலம் மொத்த திரவ ஓட்டத்திற்கும் உமிழ்நீர் துளிகளுக்கும் இடையே நிகழக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் கணக்கில் கொண்டு ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தோம். 

இருப்பினும், வெப்பநிலையைப் பொறுத்து காற்றில் உமிழ்நீரின் தன்மை மற்றும் மாற்றம் குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் தேவை' என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

முடிவில், காற்று புகாத இடங்கள், குறிப்பாக ஏ.சி. அறைகளில் எளிதாக வைரஸ் பரவும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுப்பதோடு, கரோனா தொற்றைத் தடுக்க மக்கள் கூடுதல் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com