அமெரிக்க அதிபர் தேர்தல்: தொடரும் இழுபறி

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல்: தொடரும் இழுபறி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் வெற்றியை நெருங்குவதாகக் கருதப்பட்டாலும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று கூறும் வகையில் நிலைமை உள்ளது.
ஒருசில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையில் தாமதம், தபால் வாக்குகளை எண்ணுவதில் ஏற்பட்டு வரும் தாமதம் காரணமாக, முடிவுகள் வெளியாவதில் இழுபறி நீடித்து வருகிறது. அத்துடன், வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்கக் கோரி டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தை அணுகியுள்ளதும் நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத வகையில் தேர்தலில் 66.9 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் மீண்டும் அதிபராகும் நோக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜனநாயகக் கட்சி சார்பில் களமிறங்கிய முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தேர்தல் களத்தில் அதிபர் டிரம்ப்புக்குக் கடும் போட்டி அளித்தார். 
வாக்குப் பதிவு நிறைவடைந்ததும், அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. பெரும்பாலான மாகாணங்கள் தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டன. அந்த முடிவுகளின்படி, ஜோ பிடனுக்கு ஆதரவாக 264 மக்கள் பிரதிநிதி வாக்குகள் கிடைத்துள்ளன. அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக 214 பிரதிநிதி வாக்குகள் கிடைத்துள்ளன. 
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மொத்தமுள்ள 538 மக்கள் பிரதிநிதி வாக்குகளில் 270-ஐப் பெற வேண்டியது கட்டாயமாகும்.
வாக்கு எண்ணிக்கை தாமதம்:  ஜார்ஜியா, பென்ஸில்வேனியா, வடக்கு கரோலினா, நெவாடா, அரிúஸôனா ஆகிய மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக அந்த மாகாணங்களில் வாக்காளர்கள் பலர் தபால் வழியில் வாக்குகளைச் செலுத்தியதாலும், வாக்களிப்பு சதவீதம் அதிகரித்ததாலும் வாக்குகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. 
தபால் வாக்குகளை எண்ணுவோர் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியுள்ளதும் வாக்கு எண்ணிக்கையை மேலும் தாமதப்படுத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாறு படைத்த பிடன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில், இதுவரை எந்த வேட்பாளரும் பெற்றிடாத எண்ணிக்கையிலான வாக்குகளை ஜோ பிடன் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி, ஜோ பிடன் 7.2 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிபர் டிரம்ப் 6.8 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. 
இந்நிலையில், டெலவேர் மாகாணத்தில் ஜோ பிடன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைப் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றி பெற்றதாக நான் அறிவிக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, நாங்கள் வெற்றி பெறுவோம் என்றே அறிவிக்கிறேன். இந்த வெற்றி அமெரிக்க மக்களுக்கான மற்றும் ஜனநாயகத்துக்கான வெற்றியாக இருக்கும். 
அதிபர் தேர்தலில் இதுவரை மூன்று வேட்பாளர்கள் மட்டுமே அதிபராக இருப்பவரைத் தோற்கடித்துள்ளனர். அந்த வரிசையில் நான்காவது வேட்பாளராக இணைவேன் என நம்புகிறேன். இது மிகப் பெரிய சாதனையாகும்'' என்றார். அப்போது, ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸýம் உடனிருந்தார்.   
இரு தரப்பினரும் போராட்டம்: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள், வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே வேளையில், வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து நடத்துமாறு ஜோ பிடனின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நியூயார்க் நகரில் மன்ஹட்டான் பகுதியில் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட 60 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 
தேர்தல் முடிவுகள் வெளியாகாத மாகாணங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே கூடிய, அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல் துறையினர் 
குவிக்கப்பட்டனர்.

10-க்கும் மேற்பட்ட  இந்திய அமெரிக்கர்கள் மாகாண தேர்தலில் வெற்றி

அமெரிக்காவில் உள்ள மாகாண பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 5 பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெற்றனர்.
அமெரிக்க மாகாணங்களின் பேரவைகளுக்கான தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அவற்றில் இந்திய அமெரிக்கர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் நிமா குல்கர்னி (கென்டக்கி), கீஷா ராம் (வெர்மோண்ட்), வந்தனா ஸ்லேட்டர் (வாஷிங்டன்), பத்மா குப்பா (மிச்சிகன்), ஜெனிஃபர் ராஜ்குமார் (நியூயார்க்) ஆகியோர் பெண்கள் ஆவர்.  
அவர்கள் தவிர நீரஜ் ஆண்டனி (ஓஹியோ), ஜெய் செüதரி (வடக்கு கரோலினா), அமிஷ் ஷா (அரிúஸôனா), நிகில் சாவல் (பென்சில்வேனியா), ரஞ்சீவ் புரி (மிச்சிகன்), ஜெரிமி கூனி (நியூயார்க்), ஸ்ரீதானதர் (மிச்சிகன்), ஏஷ் கல்ரா (கலிஃபோர்னியா) ஆகியோரும் மாகாண பேரவைக்கான தேர்தல்களில் வெற்றி பெற்றனர்.
டெக்சாஸ் மாவட்ட நீதிபதி தேர்தலில் இந்திய அமெரிக்கரான ரவி சாண்டில் வெற்றி பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com