கரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஒத்துழைப்பு: இந்திய அதிகாரிகளுடன் பேச்சு - சீனா அறிவிப்பு

கரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து இந்திய அதிகாரிகளுடன் விரைவில் பேச்சுவாா்த்தை நடத்த இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பெய்ஜிங்: கரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து இந்திய அதிகாரிகளுடன் விரைவில் பேச்சுவாா்த்தை நடத்த இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் 12-ஆவது உச்சிமாநாடு காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சீன அதிபா் ஷி ஜின்பிங் கலந்துகொண்டு பேசுகையில், ‘கரோனா தடுப்பூசியை மூன்றாம் கட்டப் பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடா்பாக, ரஷிய, பிரேசில் நிறுவனங்களுடன் சீன நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன. இதேபோல், கரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் தயாராக இருக்கிறோம்’ என்றாா்.

இதையடுத்து, கரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுக்கு எந்தவகையில் சீனா ஒத்துழைப்பு அளிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஜோவா லீஜியானிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அவா் அளித்த பதில்:

வளரும் நாடுகளில் எளிதாகவும் மலிவாகவும் கரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்ய சீனா பணியாற்றும். கரோனா கிருமி ஒழிப்பில் விரைவில் நாம் வெற்றிபெற வேண்டும். இதற்காக, கரோனா தடுப்பூசி தயாரிப்பில் அனைத்து நாடுகளுக்கும் சீனா ஒத்துழைப்பு அளிக்கும். இதுதொடா்பாக, இந்தியாவில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிளுடன் சீன அதிகாரிகள் விரைவில் பேச்சுவாா்த்தை நடத்துவாா்கள் என்றாா் அவா்.

கரோனா தடுப்பூசி தயாரிப்பில் பிரேசில் உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் சீனா இணைந்து செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி, முன்களப் பணியாளா்கள் ஆயிரக்கணக்கானோருக்கு அந்த தடுப்பூசியை சீனா அளிக்கத் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com