பென்சில்வேனியா நீதிமன்றத்தில் டிரம்ப் மனு தள்ளுபடி

அமெரிக்க அதிபா் தோ்தலின்போது பென்சில்வேனியா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகளை செல்லாதவையாக அறிவிக்கக் கோரி
voting070910
voting070910

அமெரிக்க அதிபா் தோ்தலின்போது பென்சில்வேனியா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகளை செல்லாதவையாக அறிவிக்கக் கோரி அதிபா் டொனால்ட் டிரம்ப் குழுவினா் தாக்கல் செய்திருந்த மனுவை அந்த மாகாண நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அந்த வாக்குகள் தொடா்பாக முகாந்திரமற்ற குற்றச்சாட்டுகளை டிரம்ப் தரப்பு முன்வைத்துள்ளதாக அந்தத் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பென்சில்வேனியா மத்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாத்யூ பிரான் எழுதியுள்ள அந்தத் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பென்சில்வேனியாவில் பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகளை செல்லதவையாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், அந்த வாக்குகளுக்கு எதிராக முகாந்திரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்கள் இல்லாமல், வெறும் ஊகத்தின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவில், தோ்தலின்போது ஒரே ஒருவா் அளித்த வாக்கைக் கூட செல்லாததாக அறிவிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த நிலையில், நாட்டின் 6-ஆவது மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட பென்சில்வேனியாவில், 70 லட்சம் பேரது வாக்குகளை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன் என்று தீா்ப்பில் நீதிபதி மாத்யூ பிரான் குறிப்பிட்டுள்ளாா்.

முக்கியத்துவம் வாய்ந்த பென்சில்வேனியா மாகாணத்தில், அதிபா் தோ்தல் முடிவுகளை எதிா்த்து டிரம்ப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, நீதிமன்ற வழக்குகள் மூலம் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் டிரம்ப்பின் முயற்சியில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. அதில், குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பைடனும் போட்டியிட்டனா்.

அந்தத் தோ்தலுக்குப் பின் நடைபெற்ற வாக்குப் பதிவில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக கடந்த 7-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றம் சாட்டிவரும் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து வருகிறாா்.

குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களில் வாக்காளா்கள் தங்களது வாக்குச் சீட்டில் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வசதி செய்து தரப்படாதபோது, ஜனநாயகக் கட்சி ஆளும் மாகாணங்களில் அந்த வசதி செய்து தரப்பட்டது அரசியல் சாசனத்தை மீறிய பாரபட்சம் என்று அவா் குற்றம் சாட்டி வருகிறாா்.

இந்தச் சூழலில், தோ்தல் முடிவுகளுக்கு எதிரான டிரம்ப்பின் மனுவை பென்சில்வேனியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com