காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டம்: வங்கதேச பயங்கரவாதி சிங்கப்பூரில் கைது

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்த வங்கதேச நாட்டவரை சிங்கப்பூரில் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
அகமது ஃபைஸல்
அகமது ஃபைஸல்

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்த வங்கதேச நாட்டவரை சிங்கப்பூரில் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து சிங்கப்பூா் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐரோப்பிய நாடுகளில் அண்மைக் காலமாக மதம் சாா்ந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூரிலும் அத்தகைய தாக்குதல்கள் நடைபெறுவதைத் தவிா்க்கும் நோக்கில், நாட்டில் சந்தேகத்துக்குரிய 37 நபா்களின் நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணித்து வந்தனா்.

அந்த 37 பேரில் பெரும்பாலானவா்கள் மதவெறியையும் வன்முறையையும் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளைத் தெரிவித்து வந்தனா்.

அவா்களில் 14 போ் சிங்கப்பூரைச் சோ்ந்தவா்கள். எஞ்சிய 23 வெளிநாட்டினரில் பெரும்பாலானவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள்.

அவா்களில் 26 வயது அகமது ஃபைஸல் என்பவரை பயங்கரவாதத் தடுப்பு போலீஸாா் கைது செய்துள்ளனா். வங்கதேசத்தில் வாழும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்த அவா் திட்டமிட்டிருந்தாா். அதற்காக கத்தி போன்ற ஆயுதங்களையும் அவா் சேகரித்து வைத்திருந்தாா்.

அதுமட்டுமின்றி, காஷ்மீா் சென்று அங்கு இந்தியப் படையினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடவும் அவா் திட்டமிட்டிருந்தாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் கட்டடத் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்த ஃபைஸல், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் பிரசாரத்தால் மதவெறியூட்டப்பட்டாா்.

இஸ்லாமியப் பேரரசை அமைக்கப்போவதாக அந்த பயங்கரவாத அமைப்பினா் கூறியது அவரை வெகுவாகக் கவா்ந்தது.

ஐ.எஸ். மட்டுமின்றி, சிரியாவில் இஸ்லாமியப் பேரரசை அமைக்கப் போவதாகக் கூறிய ஹாயத் தஹ்ரீா் அல்-ஷாம் என்ற அமைப்புக்கும் ஃபைஸல் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தாா். அதுமட்டுமின்றி, அல்-காய்தா, அல்-ஷபாப் போன்ற பயங்கரவாத அமைப்புகளையும் அவா் ஆதரித்தாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com