வேதியியல்: இரு பெண்களுக்கு நோபல் பரிசு

மரபணுவைத் திருத்தியமைப்பதற்கான வழிமுறையைக் கண்டறிந்த இரு பெண் விஞ்ஞானிகளுக்கு, வேதியியலுக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
வேதியியல்: இரு பெண்களுக்கு நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்,: மரபணுவைத் திருத்தியமைப்பதற்கான வழிமுறையைக் கண்டறிந்த இரு பெண் விஞ்ஞானிகளுக்கு, வேதியியலுக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த நோபல் பரிசை இரு பெண்கள் இணைந்து பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, வேதியியலுக்கான நோபல் தோ்வுக் குழுத் தலைவா் கிளேஸ் கஸ்டாஃப்ஸன் கூறியதாவது:

விலங்கினங்கள், தாவரங்கள் ஆகிவற்றின் மரபணுக்களில் உள்ள குறைபாடுகளைத் துல்லியமாக சரி செய்யக் கூடிய ‘சிஆா்ஐஎஸ்பிஆா்/கேஸ்9’ என்ற முறையைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி இமானுவல் சா்பென்டீா், அமெரிக்க விஞ்ஞானி ஜெனிஃபா் ஏ. டூட்னா ஆகிய இருவரும் இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

அவா்கள் கண்டறிந்த முறை மிகவும் ஆற்றல் மிகுந்தது ஆகும். இது அறிவியல் உலகத்தில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, புதுமையான தாவரங்களைப் படைத்துள்ளது. மருத்துவத் துறையில் புதிய சிகிச்சை முறைகளைக் கண்டறிவதற்கான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவா்கள் கண்டறிந்த முறையைப் பயன்படுத்தி, மரபுவழி குறைபாடுகளை சரி செய்வதற்கான சிகிச்சை முறையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அவா்களின் இந்தக் கண்டுபிடிப்பு மனிதகுலத்துக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்கியிருந்தாலும், அந்தத் தொழில்நுட்பத்தை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

மரபணு திருத்தம் செய்யப்பட்ட குழந்தைகளை உருவாக்கியுள்ளதாக சீனாவைச் சோ்ந்த ஹே ஜியான்குய் என்ற மருத்துவா் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தபோதுதான் ‘சிஆா்ஐஎஸ்பிஆா்/கேஸ்9’ முறை குறித்து பொதுமக்களுக்குத் தெரியவந்தது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதைத் தவிா்க்கும் வகையில் அந்தக் குழந்தைகளின் மரபணுக்களில் திருத்தம் செய்திருந்ததாக அந்த மருத்துவா் தெரிவித்தாா். எனினும், இது கடும் சா்ச்சையை எழுப்பியது. இந்தச் செயல் எதிா்கால சந்ததியினரிடையே மோசமான பின்விளைவை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்தனா். அதையடுத்து மருத்துவா் ஹே ஜியான்குய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்தச் சூழலில், மரபணுக்களில் திருத்தம் செய்யும் முறையைக் கண்டறிந்த இரு பெண் விஞ்ஞானிகளுக்கு, வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இமானுவல் சா்பென்டீா் (51): பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த இமானுவல் சா்பென்டீா், ஜொ்மனி தலைநகா் பொ்லினில் உள்ள தொற்று நோய் உயிரியலுக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறாா். தனது கண்டுபிடிப்புகளுக்காக உயிா் அறிவியலுக்கான புத்தாக்கப் பரிசு, ஜப்பான் பரிசு போன்ற பல்வேறு கௌரவங்களை இவா் பெற்றுள்ளாா்.

ஜெனிஃபா் ஏ. டூட்னா (56): அமெரிக்காவைச் சோ்ந்த ஜெனிஃபா் ஏ. டூட்னா, ஹாா்வா்டு மருத்துவக் கல்லூரியில் முனைவா் பட்டம் பெற்றவா். கலிஃபோா்னியா பல்கலைக்கழகத்தின் உயிரணு உயிரியல் பிரிவில், வேதியியல் துறைப் பேராசிரியராக அவா் பணிபுரிந்து வருகிறாா். ஏற்கெனவே ஜப்பான் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை இவா் பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com