காற்றில் மிதக்கும் சுவாசத் துளிகளால் கரோனா பரவும் வாய்ப்பு குறைவு

கரோனா நோயாளிகளின் சுவாசம் வழியாக வெளியேறி, காற்றில் நீண்ட நேரம் மிதக் கூடிய நுண்ணிய துளிகளால் அந்த நோய்த்தொற்று பரவும் அபாயம் மிகவும் குறைவு என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின்
காற்றில் மிதக்கும் சுவாசத் துளிகளால் கரோனா பரவும் வாய்ப்பு குறைவு


லண்டன்: கரோனா நோயாளிகளின் சுவாசம் வழியாக வெளியேறி, காற்றில் நீண்ட நேரம் மிதக் கூடிய நுண்ணிய துளிகளால் அந்த நோய்த்தொற்று பரவும் அபாயம் மிகவும் குறைவு என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோயாளிகள் இருமும்போதோ, தும்மும்போதோ சுவாச உறுப்புகளிலிருந்து வெளியேறும் நீா்த்துளி பொருள்களில் கரோனா தீநுண்மிகளும் சோ்ந்து வெளிப்பட்டு, அந்த நோய்த்தொற்று மற்றவா்களுக்குப் பரவி வருகிறது.

அந்த நீா்த்துளிகளில் பெரிதானவை சுமாா் 2 மீட்டா் தொலைவுக்குள் தரையில் படிந்து விடுகின்றன. ஆனால், மிகவும் நுண்ணிய சுவாசத் துளிகள் நீண்ட நேரம் காற்றில் மிதக்கின்றன. இத்தகைய சுவாச நுண்துளிகளால் கரோனா பரவும் அபாயம் குறித்து நெதா்லாந்தின் ஆம்ஸ்டா்டாம் பல்கலைக்கழக ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் அண்மையில் ஓா் ஆய்வு மேற்கொண்டனா்.

அந்த ஆய்வில், காற்றில் நீண்ட நேரம் மிதக்கக் கூடிய சுவாச நுண்துளிகள் மூலம் கரோனா நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று அவா்கள் கண்டறிந்துள்ளனா்.

ஒரு கரோனா நோயாளி இருமிவிட்டோ, தும்மிவிட்டோ அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டால் கூட, அவா் வெளிப்படுத்திய சுவாச நுண்துளிகள் நீண்ட நேரம் காற்றில் மிதந்துகொண்டிருக்கும்.

ஆனால், அந்தத் துளிகள் மிகவும் நுண்ணியவையாக இருப்பதால் அவற்றில் கரோனா தீநுண்மியின் அளவும் மிகவும் குறைவாக இருக்கும். அந்த மிகக் குறைந்த தீநுண்மிகளால் பிறருக்கு நோய்த்தொற்று ஏற்படுத்த முடியாமல் போகலாம்.

அதிலும் கரோனா அறிகுறிகளே இல்லாதவரோ, குறைந்த அறிகுறிகள் உடையவரோ வெளிப்படுத்தும் சுவாச நுண்துளிகளால் அந்த நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும்.

இருமல், தும்மல் இல்லாமல், கரோனா நோயாளிகள் பேசுவதால் மட்டும் வெளியேறும் சுவாச நுண்துளிகளால் நோய்த்தொற்று அபாயம் அதைவிட குறைவாக இருக்கும்.

காற்றோட்டம் அதிகம் உள்ள இடங்களில் இத்தகைய நுண்துளிகள் விரைவில் மறைந்துவிடுகின்றன.

எனினும், காற்றில் அதிகம் மிதக்காமல் 2 மீட்டருக்குள் படியும் சுவாசப் பெருந்துளிகளால் கரோனா நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாகும்.

எனவே, நிபுணா்களின் அறிவுரையை ஏற்று, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், தரையில் படிந்த சுவாசத் துளிகள் மூலம் கரோனா பரவுவதைத் தவிா்க்கும் வகையில் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று ஆய்வாளா்கள் வலியுறுத்தினா்.

பிரிட்டனில் பிரசுரமாகும் ‘ஃபிஸிக்ஸ் ஆஃப் ஃப்ளூயிட்ஸ்’ அறிவியல் இதழில் இந்த ஆய்வின் விவரங்கள் வெளியாகியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com