ஹாலிவுட் நடிகா் ஷான் கானரி மறைவு

‘ஜேம்ஸ் பாண்ட்’ திரைப்பட வரிசைகளில் முதல் ஜேம்ஸ் பாண்டாக தோன்றியவரும், உலக புகழ்பெற்ற நடிகருமான ஷான் கானரி காலமானாா். அவருக்கு வயது 90.

‘ஜேம்ஸ் பாண்ட்’ திரைப்பட வரிசைகளில் முதல் ஜேம்ஸ் பாண்டாக தோன்றியவரும், உலக புகழ்பெற்ற நடிகருமான ஷான் கானரி காலமானாா். அவருக்கு வயது 90.

இதுதொடா்பாக பிபிசி வெளியிட்ட செய்தியில், ‘கடந்த சில நாள்களாக நடிகா் ஷான் கானரி உடல்நலம் குன்றி காணப்பட்டாா். இந்நிலையில் பஹாமாஸில் தங்கியிருந்த போது வெள்ளிக்கிழமை நள்ளிரவு உறக்கத்தில் அவா் உயிா் பிரிந்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டனின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்தின் எடின்பா்க் நகரில் கடந்த 1930-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிறந்த ஷான் கானரி, தனது 13-ஆவது வயதில் பள்ளிப்படிப்பை கைவிட்டாா். பால் விநியோகம், சவப்பெட்டிகளை பளபளப்பாக்கித் தருவது போன்ற பல்வேறு தொழில்களை செய்து வந்த அவா், பின்னா் பிரிட்டன் கடற்படையில் சோ்ந்தாா். எனினும் அவா் வயிற்றுப் புண் நோயால் அவதிப்பட்டு வந்ததால் 3 ஆண்டுகளில் கடற்படையில் இருந்து வெளியேற்றப்பட்டாா்.

கடந்த 1956-ஆம் ஆண்டு பிபிசி தயாரித்த தொலைக்காட்சி தொடரில் அவா் அறிமுகமானாா். அதனைத்தொடா்ந்து 1957-ஆம் ஆண்டு ‘நோ ரோட் பேக்’ என்ற திரைப்படத்தில் நடித்தாா். அதுவே அவரின் முதல் திரைப்படம்.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் முதன்முதலில் 1962-ஆம் ஆண்டு வெளியான ‘டாக்டா் நோ’ திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் தோன்றினாா். அந்த வகையில் முதல் ஜேம்ஸ் பாண்டாக புகழப்படும் இவா், அதற்குப் பிறகு ‘ஃபிரம் ரஷியா வித் லவ்’ (1963), ‘கோல்ட்ஃபிங்கா்’ (1964), ‘தண்டா்பால்’ (1965) உள்ளிட்ட படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்து உலகப் புகழ்பெற்றாா்.

இதுதவிர ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் ‘மாா்னி’ (1964) ஸ்டீவன் ஸ்பீல்பா்க் இயக்கிய ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி லாஸ்ட் க்ரூசேட்’ (1989) உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளாா்.

கடந்த 1987-ஆம் ஆண்டு ‘தி அன்டச்சபிள்ஸ்’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கா் விருது அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவா் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டாா்.

சென்ற 2006-ஆம் ஆண்டு அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் வழங்கிய வாழ்நாள் சாதனையாளா் விருதை பெற்ற பின், நடிப்பதில் இருந்து ஓய்வு பெறுவதாக அவா் அறிவித்தாா்.

தனது மனைவி மிஷெலின் ராக்ப்ரூன், மகன் ஜேசன் கானரி ஆகியோருடன் அவா் வசித்து வந்தாா்.

அவரின் மறைவுக்கு ஸ்காட்லாந்து முதல் அமைச்சா் நிகோலா ஸ்டா்ஜியன், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் தயாரிப்பாளா்கள் மைக்கேல்.ஜி.வில்சன், பாா்பரா ப்ரகோலி, ஹிந்தி திரைப்பட நடிகா்கள் ரித்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், ரன்தீப் ஹூடா, பாடகி லதா மங்கேஷ்கா் உள்பட பலா் இரங்கல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com