ரஷிய-இந்திய-சீன அமைச்சர்கள் கூட்டாக சந்திக்க திட்டம்

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ரஷிய, இந்திய, சீன வெளியுறவுத் துறை அமைச்சர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பெய்ஜிங் / மாஸ்கோ: ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ரஷிய, இந்திய, சீன வெளியுறவுத் துறை அமைச்சர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு லடாக்கில் சீனா மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதால் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியிருக்கும் நிலையில், இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஒ) வெளியுறவுத் துறை அமைச்சர்களின் இரு நாள் மாநாடு புதன்கிழமை (செப்.9) தொடங்கியது. 

இதுகுறித்து பெய்ஜிங்கில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது: 

மாஸ்கோவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தின்போது, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இதர நாட்டு அமைச்சர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

அதுபோல, ரஷியா, இந்தியா, சீனாவின் நிகழ்ச்சி நிரலின்படி, அந்த நாடுகளிடையேயான பிராந்திய உறவு, சர்வதேச விவகாரங்கள், வர்த்தக உறவுகள் குறித்து இந்த மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களிடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தனியாக நடைபெற உள்ளது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்ற விவரம் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

சந்திப்பு: இந்நிலையில், எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாஸ்கோ வந்துள்ள கிர்கிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சிங்கிஸ் அய்தர்பெகோவ் மற்றும் தஜிகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சிராஜிதின் மஹ்ரிதின் ஆகியோரை ஜெய்சங்கர் புதன்கிழமை தனித் தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின், அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை மிகுந்த பயனுள்ளதாகவும், சிறப்பாகவும் அமைந்தது. 

இந்தியாவுக்கும், அந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு துறைகள் சார்ந்த உறவை மேலும் வலுப்படுத்த இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார். 

ரஷிய அமைச்சருடனும்...: அதேபோல், ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவையும் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "ரஷிய வெளியுறவு அமைச்சரை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. அவருடனான பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது. இந்தியா-ரஷியா இடையேயான உத்தி சார்ந்த உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்ததுடன், சர்வதேச சூழல் தொடர்பாக இரு நாடுகளின் பார்வைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டது' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com