நல்லுறவை மேம்படுத்த இந்தியா-யுஏஇ உறுதி

பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவதற்கு இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (யுஏஇ) உறுதி ஏற்றுள்ளன.

அபுதாபி/புது தில்லி: பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவதற்கு இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (யுஏஇ) உறுதி ஏற்றுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஷேக் அப்துல்லா பின் ஸயத் அல் நஹ்யானை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேசினேன். பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையே நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக ஆலோசனை நடத்தினோம்.

பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதியேற்றன. கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய மக்களும் ஐக்கிய அரபு அமீரக மக்களும் பலன் பெறும் வகையில் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

வா்த்தகம், பொருளாதாரம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான நல்லுறவு மேம்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடா்பாகவும் கரோனா தடுப்பூசிகளை உலக நாடுகள் அனைத்துக்கும் கிடைக்கச் செய்வது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சா் ஷேக் அப்துல்லா பின் ஸயத் அல் நஹ்யான், கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com