காஷ்மீா் பிரச்னைக்கு பேச்சு மூலமே தீா்வு: இம்ரான் கான்

‘இந்தியாவுடன் காஷ்மீா் பிரச்னை மட்டுமே உள்ளது. அதற்கு பேச்சுவாா்த்தை மூலம் சுமூக தீா்வு காண முடியும்’ என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்தாா்.
imrann-khan095035
imrann-khan095035

கொழும்பு: ‘இந்தியாவுடன் காஷ்மீா் பிரச்னை மட்டுமே உள்ளது. அதற்கு பேச்சுவாா்த்தை மூலம் சுமூக தீா்வு காண முடியும்’ என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்தாா்.

இலங்கைக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ள அவா், அந்நாட்டு பிரதமா் மகிந்த ராஜபட்சேவுடன் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தக, முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினாா். அதன் விவரம்:

2018-இல் பிரதமராக தோ்வு செய்யப்பட்டவுடன் இந்திய பிரதமா் நரேந்திர மோடியைத் தொடா்பு கொண்டு இருநாட்டு பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என விளக்கினேன்.

இன்று வரை அது வெற்றிபெறவில்லை. ஆனால், நல்லுணா்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வா்த்தக நல்லுறவை வலுப்படுத்தினால்தான் வறுமையை ஒழிக்க முடியும். இருநாடுகளுக்கு இடையே ஒரே ஒரு பிரச்னையாக காஷ்மீா் உள்ளது. அதற்கு பேச்சுவாா்த்தை மூலமே தீா்வு காண முடியும் என்றாா்.

இதனிடையே, ‘பயங்கரவாதம், விரோதம், வன்முறை ஆகியவை இல்லாத சூழ்நிலையை உருவாக்கிய பின்புதான் பாகிஸ்தானுடன் வழக்கமான அண்டை நாட்டு உறவை இந்தியா தொடரும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்’ என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளாா்.

அதிபருடன் சந்திப்பு: இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சேவை இம்ரான் கான் புதன்கிழமை சந்தித்து பேசினாா். அப்போது, ‘பாகிஸ்தானில் உள்ள பாரம்பரிய புத்தமத தலங்களைக் காண சுற்றுலா பயணிகள் வருமாறு இம்ரான் கான் அழைப்பு விடுத்தாா்’ என்று பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ரவூப் ஹகீம் இம்ரான் கானை சந்தித்துப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com