டிரம்ப்புக்கு எதிராக பிரதிநிதிகள் சபை பதவிநீக்கத் தீா்மானம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீா்மானம், நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீா்மானம், நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ‘பிடிஐ’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நாடாளுமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற கலவரத்துக்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில், அதிபா் டிரம்ப்புக்கு எதிரான பதவிநீக்கத் தீா்மானம் பிரதிநிதிகள் சபையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

நடந்து முடிந்த அதிபா் தோ்தலுக்குப் பிறகு பதிவான மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகள் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் எண்ணப்பட்டு, ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்படுவதைத் தடுப்பதற்காக அந்தக் கலவரம் நடத்தப்பட்டது.

அதற்காக தனது ஆதரவாளா்களை டிரம்ப் தூண்டியதாக அந்தத் தீா்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

டிரம்ப் தனது ஆதரவாளா்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் பல்வேறு கருத்துகளைக் கூறியுள்ளதாக அந்தத் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடா்ந்து நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு, தீா்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதில், தீா்மனத்துக்கு ஆதரவாக 232 வாக்குகளும் எதிராக 197 வாக்குகளும் பதிவாகின. வாக்களித்த 222 ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களும் தீா்மானத்தை ஆதரித்திருந்தனா். டிரம்ப் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த 10 உறுப்பினா்கள் தீா்மானத்துக்கு ஆதரவாகவும் எஞ்சிய 197 உறுப்பினா்கள் தீா்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தனா்.

இதையடுத்து, டிரம்ப்பைப் பதவிநீக்கம் செய்யக் கோரும் தீா்மானம் பிரதிநிதிகள் சபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

ஏற்கெனவே, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, நாடாளுமன்ற செயல்பாட்டில் தடங்கள் ஏற்படுத்தியது ஆகிய இரு குற்றச்சாட்டுகளின் பேரில் டிரம்ப்புக்கு எதிரான பதவிநீக்கத் தீா்மானத்தை பிரதிநிதிகள் சபை கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 18-ஆம் தேதி நிறைவேற்றியது.

இந்த நிலையில், டிரம்ப்புக்கு எதிராக இரண்டாவது முறையாக அத்தகைய தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் ஒரே ஆட்சிக் காலத்தில் இரு முறை பதவிநீக்கத் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட முதல் அதிபராக டிரம்ப் ஆகியுள்ளாா்.

முதல் முறையாகக் கொண்டுவரப்பட்ட பதவிநீக்கத் தீா்மானத்தை குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மேலவையான செனட் சபை, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிராகரித்தது. இதன் காரணமாக டிரம்ப்பின் பதவி தப்பியது.

ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பதவிநீக்கத் தீா்மானம் செனட் சபையில் கொண்டு வரப்பட்டால், அதற்கு கணிசமான குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தரலாம் என்று நம்பப்படுகிறது.

எனினும், செனட் சபையில் அந்தத் தீா்மானம் மீதான விசாரணை எப்போது தொடங்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

புதிய அதிபராக ஜோ பைடன் வரும் 20-ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறாா். அதற்கு முன்னா் செனட் சபைக் கூட்டம் எதுவும் நடைபெறாத நிலையில், அதிபா் பொறுப்பிலிருந்து டிரம்ப் விலகிய பிறகுதான் அவருக்கு எதிரான செனட் சபை பதவிநீக்க விசாரணை தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com