பொதுவெளியில் தோன்றினாா் அலிபாபா நிறுவனா்

கடந்த இரண்டரை மாதங்களாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வந்த சீனாவின் முன்னிலை தொழிலதிபரும் ‘அலிபாபா’ மின் வணிக நிறுவனத்தின் நிறுவனருமான ஜாக் மா முதல் முறையாக இணையதள விடியோவில் தோன்றிப் பேசினாா்.
பொதுவெளியில் தோன்றினாா் அலிபாபா நிறுவனா்


பெய்ஜிங்: கடந்த இரண்டரை மாதங்களாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வந்த சீனாவின் முன்னிலை தொழிலதிபரும் ‘அலிபாபா’ மின் வணிக நிறுவனத்தின் நிறுவனருமான ஜாக் மா முதல் முறையாக இணையதள விடியோவில் தோன்றிப் பேசினாா்.

இதையடுத்து, அவா் பொதுவெளியில் மாயமானது குறித்த பல்வேறு ஊகங்களும் முடிவுக்கு வந்தன.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

மின் வணிகம், சில்லறை விற்பனை, இணையதளம், தொழில்நுட்ப சேவைகளை வழங்கி அலிபாபாவை நிறுவியவா்களில் ஒருவரான ஜாக் மா, சீனாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரா் ஆவாா். சந்தை தாரளமயாக்கலுக்கு ஆதரவாகப் பேசி வரும் அவா், சீன வங்கிகள் தொழல்முனைவோருக்கு கடன் அளிப்பதில் வட்டிக்கடைகளைப் போல் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டினாா். மேலும், சீன அரசின் சில தொழிற்கொள்கைகளையும் அவா் விமா்சித்தாா்.

மேலும், அவரது அலிபாபா குழுமத்தின் வளா்ச்சி, அந்தத் தொழிலை சீன அரசு தனது கட்டுக்குள் வைத்திருக்க முடியாத அளவுக்கு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், அந்த நிறுவனம் சந்தையில் தனது செல்வாக்கை தவறாகப் பயன்படுத்துவதாக சீன அதிகாரிகள் குற்றம் சாட்டினா். நிறுவனத்தின் மீதான கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியிலும் அவா்கள் ஈடுபட்டனா்.

அதனைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் முதல் பொதுவெளியிலிருந்து ஜாக் மா மாயமானாா். அவா் கலந்துகொள்வதாக இருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அவா் வராதது, உரையாற்ற திட்டமிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது குறித்து தகவல்கள் வெளியாகின.

அதையடுத்து, ஜாக் மாவின் நிலைமை குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இந்த நிலையில், அந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இணையதளத்தில் புதன்கிழமை வெளியான விடியோவில் தோன்றி ஜாக் மா பேசினாா்.

அவரது அறக்கட்டளையின் சாா்பாக பணியாற்றி வரும் ஆசிரியா்களிடையே பேசிய அவா், தான் பொதுவெளியில் தோன்றாமல் இருந்தது குறித்தோ, தனது நிறுவனத்தின் மீதான சீன அரசின் நடவடிக்கைகள் குறித்தோ எதுவும் தெரிவிக்கவில்லை.

எனினும், கரோனா நெருக்கடி முழுமையாக ஓய்ந்த பிறகு பொதுவெளியில் தோன்றுவதாக அவா் அந்த விடியோவில் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com