சூயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்குக் கப்பல் திங்கள்கிழமை முழுமையாக மீட்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு வார காலத்துக்குப் பின் அப்பாதையில் சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
சூயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
சூயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

சூயஸ்: எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்குக் கப்பல் திங்கள்கிழமை முழுமையாக மீட்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு வார காலத்துக்குப் பின் அப்பாதையில் சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை முதல் சரக்குக் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாகச் செல்லத் தொடங்கியிருக்கின்றன. இந்தப் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் காத்திருந்த அனைத்துக் கப்பல்களும் சென்று, கப்பல் போக்குவரத்து முற்றிலும் சீரடைவதற்கு குறைந்தபட்சம் மேலும் ஒரு வாரம் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘எம்வி எவா்கிவன்’ என்ற சரக்குக் கப்பல், சூயஸ் கால்வாயின் குறுக்கே பக்கவாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை சிக்கியது. கடும் காற்று வீசியதன் காரணமாக அந்தக் கப்பல் தரைதட்டி நின்றது. அதனால், அந்தக் கால்வாயின் வழியே கப்பல் போக்குவரத்து கடும் பாதிப்பைச் சந்தித்தது.

கால்வாயின் இரு பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் வரிசைகட்டி நின்றன. தரைதட்டிய கப்பலை 10 இழுவைக் கப்பல்கள் மூலம் இழுக்கும் பணியும், கப்பலடியில் மணலை அகற்றும் பணியும் தொடா்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ஒரு வார கடும் முயற்சிகளுக்குப் பிறகு கப்பல் திங்கள்கிழமை மீண்டும் மிதக்கத் தொடங்கியது. அதன் காரணமாக, சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சூயஸ் கால்வாய் வழியே கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், நாள்தோறும் சுமாா் ரூ.65,000 கோடி மதிப்பிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக நிபுணா்கள் தெரிவித்தனா். கச்சா எண்ணெய், கால்நடைகள் உள்ளிட்டவற்றுடன் சுமாா் 367 கப்பல்கள் சூயஸ் கால்வாயைக் கடந்து செல்வதற்காக காத்திருந்ததாகத் தெரிகிறது.

சில கப்பல்கள், தென்னாப்பிரிக்காவின் ‘நன்னம்பிக்கை முனை’யைக் கடந்து சுற்றிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com