இந்தியா- தஜிகிஸ்தான் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வலுப்படும்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியா-தஜிகிஸ்தான் நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புதன்கிழமை தெரிவித்தார்.
இந்தியா- தஜிகிஸ்தான் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வலுப்படும்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்


துஷான்பே: இந்தியா - தஜிகிஸ்தான் நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புதன்கிழமை தெரிவித்தார்.

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் தொடர்பான மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 9-ஆவது மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது, தஜிகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சிரோஜிதின் முஹ்ரிதீனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அவர் இதை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஆப்கானிஸ்தான் தொடர்பான ஆசியாவின் இதயம்- இஸ்தான்புல் செயல்பாடுகள் குறித்த 9-ஆவது மாநாடு சரியான நேரத்தில் நடைபெற்றுள்ளது. தஜிகிஸ்தான் நாட்டின் அதிபர் எமமோலி ரஹ்மான் இந்தியா- தஜிகிஸ்தான் நாடுகளிடையிலான அதிக பொருளாதார ஒத்துழைப்பை வலியுறுத்தினார். தஜிகிஸ்தானில் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக இனிவரும் காலங்களில் தங்களது ஒத்துழைப்பு அதிகமாகக் காணப்படும் என்றார் அவர்.

இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்கள் குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச நலன்களில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்தும் வெளியுறவு அமைச்சர் சிரோஜிதீனுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சிரோஜிதீனும், நானும் ஒரு பொதுவான கருத்தைப் பகிர்ந்து கொண்டோம். இந்தியா- தஜிகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் பல ஆண்டுகளாக வளர்ந்து விரிவடைந்துள்ளதால், இரு நாடுகளிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 

வணிக சமூகத்தையும், வணிகம் மற்றும் வர்த்தக அமைப்புகளையும் இருநாடுகளிலும் ஈடுபட  தீவிரமாக ஊக்குவிப்போம். அதேசமயத்தில், இதில் இருநாட்டு அரசுகளும் தொடர்ந்து பங்கு வகிக்கும். வளர்ச்சியும், ஒத்துழைப்பும் இருதரப்பு உறவின் முக்கியத் தூணாக மாறியுள்ளது.

பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, பொறியியல் பட்டறை, மருந்து உற்பத்தி ஆலைகள், தகவல் தொழில்நுட்ப மையங்கள், புனர்வாழ்வு மையங்கள், வர்சோப்-1 நீர்மின் நிலையத்தின் நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல திட்டங்களை தஜிகிஸ்தானில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளோம். 

அடுத்த ஆண்டு நிறைவடைய உள்ள துஷான்பே- சோர்டட் நெடுஞ்சாலையின் எட்டுவழிச் சாலைப் பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடையும்பட்சத்தில் துஷான்பே நகரின் போக்குவரத்து நெருக்கடி குறையும். இதேபோல இந்தியாவின் கடனுதவித் திட்டங்களின் மூலம், தஜிகிஸ்தானில்  சமூக மேம்பாட்டு மானியத் திட்டங்களையும், எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைகளின் திட்டப் பணிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.  இதற்கான பயிற்சியும், திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பும் ஒன்றாகத் தொடரும்.

இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதில் நாங்கள் கொண்டுள்ள பொதுவான அக்கறை காரணமாக, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா மிக முக்கியமான பங்கை  வகித்து வருகிறது. இது தொடர்பாக, தஜிகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கர்னல் ஜெனரல் ஷெராலி மிர்சோவுடன் நான் நடத்திய  பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. இந்தோ-தாஜிக் நட்பு மருத்துவமனை (ஐடிஎஃப்எச்) இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது.

தற்போதைய ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினர் சேர்க்கையின்போது, தஜிகிஸ்தானுக்கு முன்னுரிமை அளிப்போம்.
பிராந்திய விவகாரங்களில் ஆப்கானிஸ்தான் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். ஆப்கானிஸ்தானில் நீடித்த அமைதிக்கு அந்த நாட்டிலும், அதைச் சுற்றியுள்ள அனைவரின் நலன்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமாதான முன்னெடுப்புகள் வெற்றிகரமாக இருக்க வேண்டுமானால், பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகள் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதில் தீவிர அர்ப்பணிப்புடன் ஈடுபடுவதை உறுதி செய்வது அவசியம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com