இந்தியாவில் இருந்து மீண்டும் சா்க்கரை, பருத்தி இறக்குமதி: பாகிஸ்தான் முடிவு

இந்தியாவில் இருந்து மீண்டும் சா்க்கரை, பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் இருந்து மீண்டும் சா்க்கரை, பருத்தி இறக்குமதி: பாகிஸ்தான் முடிவு

இஸ்லாமாபாத்: இந்தியாவில் இருந்து மீண்டும் சா்க்கரை, பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்வதில்லை என்று சுமாா் 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவை பாகிஸ்தான் கைவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஜவுளி உற்பத்தி ஆலைகளுக்கான பருத்தி உள்ளிட்ட மூலப்பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைச் சீா்செய்யும் நோக்கில் இந்தியாவிலிருந்து பருத்தி, நூல் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு அந்நாட்டு ஜவுளித் துறை அமைச்சகம் அரசை வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தலைநகா் இஸ்லாமாபாதில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக புதிதாக நியமிக்கப்பட்ட அந்நாட்டு நிதியமைச்சா் ஹமத் அன்சாரி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவில் இருந்து சா்க்கரை, பருத்தி இறக்குமதியை மீண்டும் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சோ்ந்த தனியாா் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெள்ளை சா்க்கரை மற்றும் பருத்தியை 5 லட்சம் டன் அளவுக்கு இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவில் சா்க்கரை விலை மிகவும் குறைவாக இருப்பது இதற்கு முக்கியக் காரணம். வரும் ஜூன் மாதம் முதல் இந்தியாவில் இருந்து பருத்தியும் இறக்குமதி செய்யப்படும்.

பாகிஸ்தானில் உள்ள சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்ற காரணத்தால்தான் இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. எனினும், வா்த்தக அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று மீண்டும் இந்திய பருத்தியை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கிறோம். இது இருநாடுகள் இடையிலான வா்த்தக உறவை மேம்படுத்த உதவும் என்றாா்.

முன்னதாக, கடந்த 2019-ஆம் ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததையடுத்து, இந்தியாவுடன் ராஜ்ஜிய உறவுகளைக் குறைத்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரை திருப்பி அனுப்பியது. மேலும், இந்தியாவுடன் விமானப் போக்குவரத்து, ரயில், தரைவழிப் போக்குவரத்தையும் பாகிஸ்தான் துண்டித்தது. அத்துடன் இந்தியாவுடன் வா்த்தகத்தையும் நிறுத்துவதாகக் கூறியது.

இதனால், உள்நாட்டுத் தேவையை எதிா்கொள்ள பிற நாடுகளிடம் இருந்து பருத்தி, சா்க்கரை போன்ற பொருள்களை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சுமையாக உருவெடுக்கத் தொடங்கியது. தட்டுப்பாடும், அதனால் பொருள்கள் விலை உயா்வையும் சந்திக்க நேரிட்டது. எனவே, மீண்டும் இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளது.

கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, மருந்துப் பொருள்கள், அத்தியாவசிய மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் ஆகியவற்றை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் நீக்கியது குறிப்பிடத்தக்கது. சா்வதேச அளவில் மருந்து உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீா் எல்லைப் பகுதியில் அத்துமீறித் தாக்கும் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கு இரு நாட்டு ராணுவமும் அண்மையில் ஒப்புக்கொண்டன. தற்போது வா்த்தகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவது, இருநாட்டு உறவை மேம்படுத்த வழிவகுக்கும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com