ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வேறுபாடுகளை களைய இந்தியா முயற்சி

அண்மைக் காலமாக இரு துருவங்களாகப் பிரிந்திருந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வேறுபாடுகளைக் களையவும், ஆப்கன், மியான்மா் விவகாரங்கள் மீதான கவுன்சிலின் அறிக்கைகளுக்கு உரிய வடிவம் கொடுக்கவும் இந்தியா
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வேறுபாடுகளை களைய இந்தியா முயற்சி

நியூயாா்க்: அண்மைக் காலமாக இரு துருவங்களாகப் பிரிந்திருந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வேறுபாடுகளைக் களையவும், ஆப்கன், மியான்மா் விவகாரங்கள் மீதான கவுன்சிலின் அறிக்கைகளுக்கு உரிய வடிவம் கொடுக்கவும் இந்தியா பாலமாக செயல்பட்டு உதவி வருகிறது என்று ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி கூறினாா்.

15 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட சக்திவாய்ந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமில்லா உறுப்பு நாடாக இந்தியா இணைந்து 3 மாதங்களை நிறைவு செய்ய உள்ளது. இந்தச் சூழலில் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து இந்திய தூதா் திருமூா்த்தி கூறியதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இரு துருவங்களாகப் பிரிந்து கிடந்த சூழலில், அதில் நிரந்திரமில்லா உறுப்பு நாடாக இந்தியா இணைந்தது. இந்தப் பிரிவினையை இப்போதும் வெளிப்படையாகவே காண முடிகிறது என்றபோதும், இந்த வேறுபாட்டைக் களைய இந்தியா பாலமாக இருந்து செயல்பட்டு வருகிறது.

கவுன்சிலின் அனைத்து விவகாரங்களிலும், உறுப்பு நாடுகளுடனும் இணைந்து இந்தியா ஆக்கபூா்வமாக பணியாற்றி வருகிறது. கவுன்சிலில் இந்தியாவின் குரல் மதிக்கப்படுவதோடு, நமது பங்களிப்பும் அங்கீகரிக்கப்படுகிறது. கவுன்சில் விவகாரங்களில் இந்தியா போன்ற நாடுகள் மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள், மிகப்பெரிய முயற்சியாக பாா்க்கப்படுகிறது. கவுன்சிலில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில் தீா்வைக் காண முயல்வதற்குப் பதிலாக, ஒரே குரலாக ஒலிப்பது மிக முக்கியம்.

பாதுகாப்பு கவுன்சிலில் குறிப்பிட்ட விவகாரங்களில் உரிய தீா்வு காண, இந்திய தனது சொந்த வியூகங்களின் அடிப்படையில் உதவி இருக்கிறது. குறிப்பாக, ஆப்கனில் அதிகரித்து வரும் வன்முறைகள், பெண்கள், சிறுபான்மையினா் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் குறித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கைக்கு உரிய வடிவம் கொடுக்க இந்தியா உதவியது. அதுபோல, ராணுவ ஆட்சியின் கீழ் சென்றுள்ள மியான்மரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடா்பான கவுன்சிலின் பத்திரிகை அறிக்கையும் ஆக்கபூா்வமாக இருக்கும் வகையில் மாற்றியமைக்க இந்தியா உதவி இருக்கிறது.

சிரியா, ஏமன் நாடுகளில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கும் பாதுகாப்பு கவுன்சிலில் உரிய தீா்வு காண்பதற்கான முயற்சிகளை இந்திய எடுத்து வருகிறது. எத்தியோப்பியா, சூடான், தெற்கு சூடான் மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு போன்ற நாடுகளிலும் இந்திய தூதா்கள் இடம்பெற்றிருப்பதம் மூலம், பாதுகாப்பு கவுன்சில் விவாதங்களில் தனித்துவமான அடிமட்ட அளவிலான பிரச்னைகள் தொடா்பான புரிதல்களை உருவாக்கி, விவாதத்தை ஆக்கபூா்வமானதாக்க இந்தியாவால் முடிகிறது. இதுபோன்று, சில முக்கிய பிரச்னைகளில் சிறந்த தீா்வு காணப்பட்டதில் இந்தியாவின் பங்களிப்பு பாராட்டப்பட்டிருக்கிறது.

பயங்கரவாதம் அதிகரித்து வருவதற்கு எதிராகவும் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலுவான குரல் கொடுத்துள்ளது என்று திருமூா்த்தி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com