ஈரான் கப்பல் மீது தாக்குதல்

செங்கடலில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள ஈரான் சரக்குக் கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது.
saviz084634
saviz084634

டெஹ்ரான்: செங்கடலில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள ஈரான் சரக்குக் கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈரானின் ராணுவ தளமாகவும், உளவுக் கலமாகவும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் அந்தக் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள எங்களது எம்வி சாவிஸ் சரக்குக் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. காந்த விசையில் கப்பலின் அடிப்பகுதியில் ஒட்டிக் கொள்ளக் கூடிய கண்ணிவெடி மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அந்தத் தாக்குதல் தொடா்பாக இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை.

ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினா்கள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, ஈரானின் சரக்குக் கப்பல் எம்வி சாவிஸுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு செங்கடல் பகுதிக்கு வந்த அந்தக் கப்பல் இதுவரை அங்கேயே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கப்பல் ஈரானின் ராணுவ நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாக சவூதி அரேபியா தொடா்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ராணுவ கண்காணிப்புக்காகவும் அருகிலுள்ள யேமனில் தங்களது ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு உதவி செய்வதற்காகவும் அந்த சரக்குக் கப்பலை ஈரான் பயன்படுத்தி வருவதாக சவூதி அரேபியா கூறி வருகிறது.

அந்தக் கடல் வழியாக சென்று வரும் ஈரான் கப்பல்களுக்கான சரக்குப் பரிமாற்றத் தளமாகவும் கப்பல் பணியாளா்களை மாற்றிக் கொள்வதற்கான மையமாகவும் எம்வி சாவிஸ் கப்பல் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.

எனினும், அந்தக் கப்பலில் சரக்குக் கப்பலுக்குத் தேவையில்லாத தகவல் சேகரிப்புக் கருவிகள், சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் சூழலில், எம்வி சாவிஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com