பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 50% குறைக்க அமெரிக்கா முடிவு

பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 50% குறைக்க அமெரிக்கா முடிவு


வாஷிங்டன்: வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 50 முதல் 52 சதவீதம் வரை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் காற்றில் பசுமைக்குடில் வாயுக்களின் அளவை கடந்த 2005-ஆம் ஆண்டில் இருந்ததைவிட 50 முதல் 55 சதவீதம் வரை குறைப்பதற்கு அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது.

2035-ஆம் ஆண்டுக்குள் மின் உற்பத்தித் துறையில் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்தவும் 2050-ஆம் ஆண்டுக்குள் காற்றிலிருந்து அகற்றப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு மற்றும் காற்றில் கலக்கப்படும் அந்த வகை வாயுக்களின் அளவு ஆகியவற்றுக்கிடையே வேறுபாடில்லாமல் செய்வதற்கும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமி குளிரில் உறையாமல் வெப்பமாக வைத்திருக்க உதவும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமைக்குடில் வாயுக்களின் விகிதம், தொழில்புரட்சி காரணமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக புவியின் வெப்பம் அதிகரித்து, வறட்சி, அனல் காற்று, காட்டுத் தீ, பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்தல், புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன.

‘பருவநிலை மாற்றம்’ என்றழைக்கப்படும் இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்காக சா்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன.

இதுதொடா்பான சா்வதேச முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் சுமாா் 40 நாடுகள் பங்கேற்கும் 2 நாள் சா்வதேச பருவநிலை மாநாடு வரும் வியாழன் தொடங்கியது. அதற்கு முன்னதாக அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com