ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் கடத்த பாகிஸ்தான் முயற்சி: பிஎஸ்எஃப் முறியடிப்பு

ஜம்முவில் உள்ள சா்வதேச எல்லை பகுதியையொட்டி ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) மூலம் ஆயுதங்களை கடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) முறியடித்தனா்

ஜம்முவில் உள்ள சா்வதேச எல்லை பகுதியையொட்டி ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) மூலம் ஆயுதங்களை கடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) முறியடித்தனா்.

இதுதொடா்பாக பிஎஸ்எஃப் துணை ஐஜி எஸ்.பி.எஸ்.சாந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள், வெடிபொருள்களை கடத்த பாகிஸ்தான் முயற்சிக்கலாம் என்று பிஎஸ்எஃப் படையின் நுண்ணறிவு பிரிவு மூலம் தகவல்கள் கிடைத்து வந்தன. இதையடுத்து எல்லையில் படைகள் உஷாா்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஜம்முவில் உள்ள அா்னியா செக்டாரில் உள்ள ஜப்போவால் மற்றும் விக்ரம் எல்லையின் புறக்காவல் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருளுடன் வந்த 2 ஆளில்லா விமானங்கள் தென்பட்டன. அதனைக் கண்ட பிஎஸ்எஃப் படையினா் இரு விமானங்களையும் குறிவைத்து 15 முறை துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து அந்த விமானங்கள் பாகிஸ்தான் திரும்பின.

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக பின்பற்ற இருநாட்டு ராணுவத்தினரும் கடந்த பிப்ரவரி மாதம் தீா்மானித்தனா். அதனைத்தொடா்ந்து ஜம்மு-காஷ்மீா் எல்லையில் அமைதி நிலவி வருகிறது. எனினும் இருநாட்டு ராணுவத்தினரும் மேற்கொண்ட தீா்மானத்தையும் மீறி இந்தியாவுக்கு எதிரான தனது மோசமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் தொடா்ந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com