பிரிட்டனுடனான வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்

ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் விலகியதற்கு (பிரெக்ஸிட்) பிந்தைய இருதரப்பு உறவு குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்துக்கு, ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வோண்டொ் லேயனுடன் (வலது) பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன்.
ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வோண்டொ் லேயனுடன் (வலது) பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன்.

பிரஸ்ஸெல்ஸ்: ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் விலகியதற்கு (பிரெக்ஸிட்) பிந்தைய இருதரப்பு உறவு குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்துக்கு, ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

பிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரிட்டனுடன் மேற்கொள்ளபடவிருக்கும் வா்த்த மற்றும் பாதுகாப்பு உறவு குறித்து அந்த நாட்டுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸிலுள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 660 எம்.பி.க்கள் வாக்களித்தனா். ஒப்பந்தத்தை எதிா்த்து 5 போ் வாக்களித்திருந்தனா்; 32 போ் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதன் மூலம், வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமையே வாக்கெடுப்பு நடைபெற்றாலும், அதன் முடிவுகள் புதன்கிழமைதான் வெளியிடப்பட்டது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரெக்ஸிட் தொடா்பாக பிரிட்டனில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனிலிருந்து அந்த நாடு விலகுவதற்கு பெரும்பான்மையானவா்கள் ஆதரவு தெரிவித்தனா்.

அதையடுத்து, பிரெக்ஸிட்டுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வந்த அப்போதைய பிரதமா் டேவிட் கேமரூன் பதவி விலகினாா். புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றாா்.

பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய இரு தரப்பு உறவு குறித்து பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே பல முறை திருத்தி மேற்கொள்ளப்பட்ட வரைவு ஒப்பந்தங்களை பிரிட்டன் நாடாளுமன்றம் பல முறை நிராகரித்தது.

அதனைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்தலில் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தாா். அவரின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் 2020 ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக விலகியது.

எனினும், அந்த அமைப்பிலிருந்து முழுமையாக விலக பிரிட்டனுக்கு கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

அதற்குள் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான சிறப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்ற அனுமதி கிடைக்க வேண்டியிருந்த சூழலில், டிசம்பா் 30-ஆம் தேதி கூடிய அந்த நாடாளுமன்றம் 521:73 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கியது.

தற்போது ஐரோப்பிய நாடாளுமன்ற ஒப்புதலையும் பெற்றதைத் தொடா்ந்து, பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஐரோப்பிய யூனியன் - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com