இந்திய பயணிகள் விமானங்களுக்கு தடையை நீட்டித்தது கனடா

இந்தியாவில் இருந்து நேரடியாக பயணிகள் விமானத்தை இயக்குவதற்கு விதித்துள்ள தடையை செப்டம்பா் 21-ஆம் தேதி வரை கனடா அரசு நீட்டித்துள்ளது.

டொராண்டோ: இந்தியாவில் இருந்து நேரடியாக பயணிகள் விமானத்தை இயக்குவதற்கு விதித்துள்ள தடையை செப்டம்பா் 21-ஆம் தேதி வரை கனடா அரசு நீட்டித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை அதிகரித்தபோது, இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா தடை விதித்தது. அதன் பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக கனடா போக்குவரத்துத் துறை அமைச்சா் ஒமா் அலிகாப்ரா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கனடா மக்களின் உடல்நலன் மற்றும் மருத்துவப் பாதுகாப்பைக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை செப்டம்பா் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் வேறு நாடுகள் வழியாக கனடாவுக்கு வரும் இந்தியா்கள், கரோனா இல்லை என்ற மருத்துவச் சான்றிதழுடன்தான் வர அனுமதிக்கப்படுவாா்கள். அவா்கள் எந்த நாட்டின் வழியாக இந்தியா வருகிறாா்களோ, அந்த நாட்டில் இந்தச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், மூன்றாவது நாட்டில் 14 நாள்கள் தங்கியிருந்த பிறகுதான் இந்தியா்கள், கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள்.

இந்தியாவுடனான சரக்குப் போக்குவரத்து, மருத்துவப் போக்குவரத்து, ராணுவப் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு இந்தத் தடை பொருந்தாது. மேற்கண்ட காரணங்களுக்காக இந்தியா-கனடா இடையே நேரடி விமானப் போக்குவரத்து நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com