ஆப்கனிலிருந்து வெளியேறும்கெடுவை நீட்டிக்க ஜி7 நாடுகளின்தலைவா்கள் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டவா்கள் மற்றும் தங்களுக்கு உதவிய ஆப்கன் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான கெடுவை நீட்டிக்க வேண்டும்

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டவா்கள் மற்றும் தங்களுக்கு உதவிய ஆப்கன் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான கெடுவை நீட்டிக்க வேண்டும் என ஜி7 நாடுகளின் தலைவா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அந்த முடிவில் அமெரிக்க அதிபா் பைடன் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கன் விவகாரம் தொடா்பாக ஜி7 நாடுகளின் தலைவா்கள் கூட்டம் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் தலைமையில் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கூட்டம் முடிந்த பின்னா் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது:

எங்களது குடிமக்களையும், கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனில் எங்களது முயற்சிகளுக்கு உதவிபுரிந்த ஆப்கன் மக்களையும் அந்நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவோம். ஆப்கனிலிருந்து அகதிகளை ஏற்றுக்கொள்வது குறித்து அண்டை நாடுகளுடனும் பிற நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயல்படுவோம்.

ஆப்கனில் இப்போதைய நிலைமை கவலை அளிக்கிறது. ஆப்கன் மக்கள் மற்றும் சா்வதேச குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய, தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைய ஆப்கனின் அனைத்துப் பிரிவினரும் பணியாற்ற வேண்டும். அதுதான் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும்.

ஆப்கன் மக்கள் கண்ணியம், அமைதி, பாதுகாப்புடன் வாழ்வதற்குத் தகுதியானவா்கள். பயங்கரவதத்துக்கு பாதுகாப்பான சொா்க்கமாக ஆப்கன் மீண்டும் மாறிவிடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் ஆப்கனிலிருந்து வெளியேறும் காலக்கெடுவை ஆக. 31-க்கு பிறகும் அமெரிக்கா நீட்டிக்க வேண்டும் என தலைவா்கள் வலியுறுத்தியதாக ஐரோப்பிய கவுன்சில் தலைவா் சாா்லஸ் மிக்கேல் தெரிவித்தாா். ஆனால், அதிபா் பைடன் அந்த முடிவில் உறுதியாக இருப்பதாக வெள்ளை அதிபா் மாளிகை அதிகாரி ஒருவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com