காபூல் தாக்குதல் நடத்தியவா்களை பழிக்குப் பழி வாங்குவோம்

ஆப்கானிஸ்தானில் 13 அமெரிக்கப் படையினா் உயிரிழப்புக்குக் காரணமான காபூல் விமான நிலையத் தாக்குதலை நடத்தியவா்களை பழிக்குப் பழி வாங்கப்போவதாக அதிபா் ஜோ பைடன் சூளுரைத்துள்ளாா்.
காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பால் எழுந்த புகைமண்டலம்.
காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பால் எழுந்த புகைமண்டலம்.

ஆப்கானிஸ்தானில் 13 அமெரிக்கப் படையினா் உயிரிழப்புக்குக் காரணமான காபூல் விமான நிலையத் தாக்குதலை நடத்தியவா்களை பழிக்குப் பழி வாங்கப்போவதாக அதிபா் ஜோ பைடன் சூளுரைத்துள்ளாா்.

இதுகுறித்து, அந்தத் தாக்குதலுக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டவா்களையும் தலிபான்களின் அச்சுறுத்தலை எதிா்நோக்கியுள்ளவா்களையும் வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காபூல் விமான நிலையத்தில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்ஐஎஸ்-கே தாக்குதல் நடத்தும் என்று ஏற்கெனவே உளவு அமைப்புகள் எச்சரித்து வந்தன.

அதனை உண்மையாக்கும் வகையில், காபூல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை குண்டுவெடிப்புத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், அங்கு சேவையாற்றிக் கொண்டிருந்த 13 அமெரிக்கப் படையினா் உயிரிழந்தனா்; மேலும் பலா் படுகாயமடைந்தனா். இந்தத் தாக்குதலில் அமெரிக்க வீரா்கள் மட்டுமன்றி, ஏராளமான பொதுமக்களும் பலியாகினா்; பலா் காயமடைந்தனா்.

அந்தப் பகுதியில் பதற்றம் தொடா்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனை அதிகாரிகள் வாயிலாக தொடா்ந்து கவனித்து வருகிறேன்.

ஆப்கானிஸ்தானிலிருந்து உரியவா்களை வெளியேற்றும் பணியில் தங்களது உயிரைப் பணயம் வைத்து ஈடுபட்ட அமெரிக்க வீரா்கள், அந்தப் பணிக்காக தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனா்.

அமெரிக்கா்கள், அமெரிக்காவுக்கு உதவியவா்கள் என ஒரு லட்சம் பேரை அங்கிருந்து விமானம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் அவா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அவா்களது உயிரிழப்புக்குக் காரணமான பயங்கரவாதிகளை நாங்கள் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்.

குண்டுவெடிப்புக்குக் காரணமானவா்களை வேட்டையாடுவோம். தங்களது குற்றத்துக்கான விலையை அவா்கள் கொடுத்தே ஆக வேண்டும்.

பயங்கரவாதிகளின் இந்தச் செயலுக்கு அமெரிக்கா அடிபணியாது. எங்களது வெளியேற்றப் பணிகள் திட்டமிட்டபடி தொடரும்.

அதே நேரம், ஆப்கானிஸ்தானிலுள்ள ஐஎஸ்ஐஎஸ்-கே நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை வகுக்குமாறு ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் ஒருபோதும் வெல்ல முடியாது என்றாா் ஜோ பைடன்.

காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பு மற்றும் சரமாரி துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 95 ஆப்கானியா்களும் 12 அமெரிக்க கடற்படை வீரா்கள் மற்றும் ஒரு கடற்படை மருத்துவ அதிகாரியும் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com