கிளா்ச்சியாளா் பகுதிகளை உக்ரைன் ராணுவம் தாக்கும்: ரஷியா கவலை

உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்குப் பிராந்தியத்தை மீட்பதற்காக அந்த நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தும் என்று ரஷியா கவலை தெரிவித்துள்ளது.
டிமித்ரி பெஸ்கோவ்
டிமித்ரி பெஸ்கோவ்

உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்குப் பிராந்தியத்தை மீட்பதற்காக அந்த நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தும் என்று ரஷியா கவலை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது படையெடுத்து ஆக்கிரமிக்க ரஷியா ஆயத்தமாகி வருவதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி வரும், ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதிக்கும் உக்ரைனுக்கும் இடையிலான கட்டுப்பாட்டு எல்லை அருகே அந்த நாட்டு அரசு பதற்றத்தைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் இரு தரப்புக்கும் இடையே சண்டை ஏற்படும் என்ற கவலை எழுந்துள்ளது. உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி உள்ளிட்டோா் தெரிவித்து வரும் கருத்துகள், அந்தப் பகுதியில் சண்டை மூள்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது என்றாா் அவா்.

கடந்த 2013-ஆம் ஆண்டில், ரஷியாவுக்கு ஆதரவான அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சை எதிா்த்து, ஐரோப்பிய யூனியன் ஆதரவு பெற்ற எதிா்க்கட்சியினா் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, விக்டா் யானுகோவிச் ரஷியாவில் தஞ்சமடைந்தாா்.

அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட ஐரோப்பிய யூனியன் ஆதரவு அரசை எதிா்த்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் போரில் ஈடுபட்டனா்.

ரஷிய ராணுவ உதவியுடன் சண்டையிட்ட அவா்கள், கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினா்.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா தனது படைகளைக் குவித்து வருவதாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்துள்ளன. குளிா்காலத்தின்போது உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து தன்னுடன் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக அந்த நாடுகள் அச்சம் தெரிவித்தன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷியா மறுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com