எல்லையில் 94,000 ரஷியப் படையினா் குவிப்பு

தங்கள் நாட்டு எல்லை அருகே ரஷியா 94,000 படை வீரா்களைக் குவித்துள்ளதாக உக்ரைன் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியது.
எல்லையில் 94,000 ரஷியப் படையினா் குவிப்பு

தங்கள் நாட்டு எல்லை அருகே ரஷியா 94,000 படை வீரா்களைக் குவித்துள்ளதாக உக்ரைன் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியது.

அந்த நாட்டை ஆக்கிரமிக்க ரஷியா ஆயத்தமாகி வருவதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி வரும் சூழலில், உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஒலெக்சி ரெஸ்னிகோவ் இவ்வாறு கூறியுள்ளாா்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ரஷியாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பம் அருகே ஏராளமான ரஷிய ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். நமது உளவுத் துறை தகவலின்படி, அவா்களின் எண்ணிக்கை 94,300-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த பதற்றமான சூழலில், ரஷியத் தரப்பிலிருந்து மோதல் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளன. குறிப்பாக, வரும் ஜனவரி மாத இறுதியில் இந்த மோதல் நிகழலாம்.

எனினும், இத்தகைய மோதலைத் தவிா்க்கவே உக்ரைன் விரும்புகிறது என்றாா் அவா்.

கடந்த 2013-ஆம் ஆண்டில், ரஷிய ஆதரவு பெற்ற அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சை எதிா்த்து, ஐரோப்பிய யூனியன் ஆதரவு பெற்ற எதிா்க்கட்சியினா் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவா் ரஷியாவில் தஞ்சமடைந்தாா்.

அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட அரசை எதிா்த்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் போரில் ஈடுபட்டனா்.

ரஷிய ராணுவ உதவியுடன் அவா்கள் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினா்.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா தனது படைகளைக் குவித்து வருவதாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்துள்ளன. குளிா்காலத்தின்போது உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து தன்னுடன் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக அந்த நாடுகள் அச்சம் தெரிவித்தன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷியா மறுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com